Last Updated:
இந்த ஆண்டின் இறுதிக்குள் ஒட்டுமொத்தமாக 0.50% வரை வட்டி விகிதம் உயரக்கூடும் என்றும் கணித்துள்ளனர்.
இந்திய ரிசர்வ் வங்கியின் பணவியல் கொள்கை குழுக் கூட்டம் தொடங்கியுள்ள நிலையில், இந்த வாரம் வட்டி விகிதங்கள் உயர்த்தப்படலாம் என பொருளாதார நிபுணர்கள் கணித்துள்ளனர்.
இந்தியாவில் பணவீக்கம் அதிகரிக்கும் அபாயம், அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு 97 வரை சரிவு மற்றும் சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை உயர்வு போன்ற காரணங்களால் ரிசர்வ் வங்கி ரெப்போ வட்டி விகிதத்தை உயர்த்தக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா, ஆக்சிஸ் கேபிடல் மற்றும் எம்கே குளோபல் போன்ற நிதி நிறுவனங்களின் முதன்மை பொருளாதார நிபுணர்கள், இந்த வாரம் ரெப்போ வட்டி விகிதம் 0.25% வரை உயர்த்தப்பட வாய்ப்புள்ளதாக தெரிவித்துள்ளனர். மேலும், இந்த ஆண்டின் இறுதிக்குள் ஒட்டுமொத்தமாக 0.50% வரை வட்டி விகிதம் உயரக்கூடும் என்றும் கணித்துள்ளனர்.
அதேவேளையில், ஹெச்டிஎஃப்சி பேங்க் மற்றும் ஆக்ஸ்போர்டு எகனாமிக்ஸ் நிபுணர்கள், தற்போதைக்கு வட்டி விகிதத்தில் மாற்றமிருக்காது என்றும், வரும் டிசம்பர் மாத கூட்டத்தில் மட்டுமே வட்டி உயர்வு குறித்த அறிவிப்பு வெளியாக வாய்ப்புள்ளதாகவும் தெரிவித்துள்ளனர். இதற்கிடையே, நாளை ரிசர்வ் வங்கியின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகவுள்ளது குறிப்பிடத்தக்கது.

