
மலேசியாவின் கெடா குலிம் பகுதியில் பரீட்சை பயம் மற்றும் கல்வி அழுத்தம் காரணமாக பாடசாலையின் மூன்றாவது மாடியிலிருந்து குதித்த 13 வயது மாணவர் படுகாயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
மலேசியாவின் கெடா மாநிலம் குலிம் பகுதியில் உள்ள இடைநிலைப் பாடசாலை ஒன்றின் மூன்றாவது மாடியிலிருந்து விழுந்த 13 வயது மாணவர் ஒருவர் பலத்த காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கடந்த ஞாயிற்றுக்கிழமை பாடசாலை இடைவேளையின் போது, பிற்பகல் 3.40 மணியளவில் ஈ-பிளொக் படிக்கட்டுக்கு அருகில் குறித்த மாணவர் காயங்களுடன் விழுந்து கிடந்ததை அடுத்து, 48 வயதான ஆசிரியர் ஒருவர் அளித்த புகாரின் பேரில் இந்த விவகாரம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது.
சம்பவ இடத்திற்கு ஆசிரியர் சென்றபோது மாணவர் சுயநினைவுடன் பேசியதாகவும், உடனடியாக அவர் மீட்கப்பட்டு சிகிச்சைக்காக குலிம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாகவும் குலிம் மாவட்ட பொலிஸ் தலைவர் ஷம்சுல் சின்ரிங் தெரிவித்துள்ளார்.
கல்விச் சுமை மற்றும் பரீட்சை அழுத்தம் காரணமாகவே மாணவர் மூன்றாவது மாடியிலிருந்து வேண்டுமென்றே கீழே குதித்துள்ளமை முதற்கட்ட பொலிஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.
அதே பாடசாலையில் படிவம் நான்கில் கற்கும் தனது மூத்த சகோதரியின் கல்வித் திறனுடன் தனது அடைவுகளை அடிக்கடி ஒப்பிட்டுப் பார்த்து அந்த மாணவர் மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளார்.
அடுத்த வாரம் நடைபெறவுள்ள பரீட்சையில் பெற்றோரின் எதிர்பார்ப்புகளைப் பூர்த்தி செய்ய முடியாமல் போய்விடுமோ என்ற அச்சமே இம்முடிவுக்குக் காரணம் என மாணவர் பொலிஸாரிடம் கூறியுள்ளார்.
மேலும், சம்பவத்திற்கு முதல் நாள் தனது படிப்பு மற்றும் குடும்ப அழுத்தம் குறித்து குறித்த மாணவர் இன்ஸ்டாகிராமில் பதிவிட்டு பின்னர் அதை நீக்கியுள்ளமை சக மாணவர்கள் மூலம் கண்டறியப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

