ஐடி வேலையை விட்டு ஆட்டோ ஓட்டுநரான பெங்களூரு இளம்பெண்..!! வருமானம் எவ்வளவு தெரியுமா?
பெங்களூரு என்றாலே ஐடி வேலை தான் நினைவுக்கு வரும். ஆனால் ஐடி வேலைகள் அத்தனை சாதாரணமாக கிடைப்பது இல்லை. அப்படியே கிடைத்தாலும் கடுமையான பணி அழுத்தம், பணிநீக்க அச்சம் என பல சிக்கல்கள் இருக்கின்றன. இந்நிலையில் பெங்களூருவை சேர்ந்த ஒரு பெண் ஐடி துறையில் வேலை பார்த்து வந்தார். திடீரென அந்த ஐடி வேலையை விட்டு தற்போது ராபிடோ நிறுவனத்தின் ஆட்டோ ஓட்டுநராக மாறி அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளார்.
சமீபத்தில் தன்வீ என்பவர் இன்ஸ்டாகிராமில் இந்த பெண் குறித்த வீடியோவை வெளியிட அது வைரலாகிவிட்டது. அவரது பெயர் அபர்ணா என தெரிய வந்துள்ளது. அண்மையில் இந்த பெண்ணின் தந்தை காலமானார். அதை தொடர்ந்து தனது தாயை அருகில் இருந்து கவனித்து கொள்ள வேண்டிய பொறுப்பு அவருக்கு ஏற்பட்டது. ஐடி வேலையில் அடிக்கடி ஷிஃப்டு மாறுவது, நிறுவனத்தின் கேப் சேவைக்காக அலுவலகம் செல்வதற்கு ஒன்று அல்லது இரண்டு மணி நேரத்திற்கு முன்பே தயாராக வேண்டியது என இருந்ததால் அவரது தாயை முறையாக கவனிக்க முடியாமல் போனதாம்.

முறையற்ற வேலை நேரம் மற்றும் கடுமையான மன அழுத்தம் காரணமாக அவருக்கு PCOD போன்ற உடல்நல பிரச்சனைகளும் ஏற்பட்டன. இந்நிலையில் தான் ஐடி வேலையை விட்டு ராபிடோவில் ஆட்டோ ஓட்ட தொடங்கியுள்ளார். தற்போதைய ஆட்டோ ஓட்டும் தொழிலில் அவர் தனது முந்தைய ஐ.டி வேலையை விட அதிகமாகவே சம்பாதிப்பதாக தெரிவித்துள்லார். அதாவது, அவர் மாதந்தோறும் சுமார் 60,000 ரூபாய் வரை சம்பாதிக்கிறாராம்.
பணத்தை விட தனக்கும் தனது தாய்க்கும் தன்னால் நேரம் ஒதுக்க முடிகிறது என மகிழ்ச்சியுடன் தெரிவிக்கிறார். அது மட்டுமில்லாமல் மன அமைதியுடன் இருப்பதாகவும் ஐடி வேலையில் கிடைக்காத சுதந்திரம் இந்த தொழிலில் தனக்கு கிடைத்துள்ளதாக அவர் மகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார்.
தன்வி அந்த பெண்ணுடன் ஆட்டோ பயணம் செய்தபோது நடந்த உரையாடலை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ளார். இது சமூக வலைதளங்களில் கவனம் பெற்றுள்ளது.மக்கள் என்ன சொல்லுவார்கள் என்ற வழக்கமான கேள்விகளை தூக்கியெறிந்துவிட்டு, தனது சொந்த விருப்பத்தின் படி வாழ்க்கையை நகர்த்தும் பெங்களூரு பெண்ணின் தைரியத்தை நெட்டிசன்கள் பலரும் பாராட்டி வருகின்றனர்.
ஒருவர் கார்ப்பரேட் வேலையை துறந்து ஆட்டோ ஓட்டுவது சிறந்தது என நினைக்கிறார் என்றால், அந்த அளவுக்கு கார்ப்பரேட் கலாச்சாரம் மோசமாகிவிட்டது என்பதை எண்ணி நிறுவனங்கள் வெட்கப்பட வேண்டும் என நெட்டிசன்கள் கூறுகின்றனர்.
Disclaimer: இந்த செய்தியில் இருக்கும் கருத்துகள் மற்றும் பரிந்துரைகள் தனிப்பட்ட ஆய்வாளர்கள் அல்லது நிறுவனங்களின் சொந்த கருத்துகளாகும், இவை Goodreturns.in அல்லது Greynium Information Technologies Private Limited (இவை இரண்டும் “நாங்கள்” என குறிப்பிடப்படுகிறது) ஆகியவற்றின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை. உள்ளடக்கத்தின் துல்லியம், முழுமை அல்லது நம்பகத்தன்மைக்கு நாங்கள் எந்தவொரு உத்தரவாதம் அளிக்கவோ, அங்கீகரிக்கவோ அல்லது பொறுப்பேற்கவோ மாட்டோம். மேலும், முதலீட்டு ஆலோசனை அல்லது பங்குகளை வாங்கவோ விற்கவோ எந்த வித தூண்டுதலையும், ஊக்கத்தையும் நாங்கள் வழங்கவில்லை. அனைத்து தகவல்களும் புரிதல் நோக்கங்களுக்காக மட்டுமே வழங்கப்படுகின்றன. எந்தவொரு முதலீட்டு முடிவுகளை எடுப்பதற்கு முன்பும், அங்கீகரிக்கப்பட்ட நிதி ஆலோசகர்களிடமிருந்து தனிப்பட்ட முறையில் சரிபார்க்கப்பட வேண்டும்.

