Last Updated:
மத்திய கிழக்கில் நிலவும் மோதல்கள் காரணமாக ஹோர்முஸ் ஜலசந்தி வழியாகக் கச்சா எண்ணெய் செல்வதில் தடைகள் ஏற்பட்டுள்ளன.
உலகளாவிய கச்சா எண்ணெய் தேவையை சமாளிப்பதற்கான கையிருப்பு ஆபத்தான நிலைக்கு சென்றுள்ளதாக சவூதி அரம்கோ நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி அமீன் நாசர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
ஹோர்முஸ் ஜலசந்தி கடல் வழிப்பாதை மீண்டும் முழுமையாகத் திறக்கப்பட்டு இயல்பு நிலை திரும்பும் வரை உலகச் சந்தையில் கச்சா எண்ணெய் மற்றும் எரிபொருள் விலை மீதான அழுத்தம் தீவிரமடையும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
லண்டனில் நடைபெற்ற ‘எனர்ஜி இன்டலிஜென்ஸ் போரம்’ மாநாட்டில் உரையாற்றிய அவர், உலகின் முக்கியப் பொருளாதார நாடுகள் 100 மில்லியன் பீப்பாய்கள் வரை அவசரகாலக் கையிருப்பு எண்ணெயை வெளியிடத் திட்டமிட்டிருந்தாலும், அது தற்காலிக நிவாரணத்தையே தருமே தவிர விநியோகக் பற்றாக்குறையை முழுமையாகத் தீர்க்காது என்று தெளிவுபடுத்தியுள்ளார்.
மத்திய கிழக்கில் நிலவும் மோதல்கள் காரணமாக ஹோர்முஸ் ஜலசந்தி வழியாகக் கச்சா எண்ணெய் செல்வதில் தடைகள் ஏற்பட்டுள்ளன. இதனால் உலகளவில் எண்ணெய் கையிருப்பு மிகவும் கவலைக்கிடமான அளவுக்குக் குறைந்துள்ளதாகவும், சுத்திகரிக்கப்பட்ட எரிபொருட்களின் விலைகள் கச்சா எண்ணெயை விட மிக வேகமாக உயர்ந்து வருவதாகவும் அமீன் நாசர் எச்சரித்துள்ளார்.
ஹோர்முஸ் கடல் வழிப்பாதை திறக்கப்பட்ட பின்னரும் கூட, நுகர்வு நாடுகள் தங்களுடைய அவசரகால எண்ணெய் இருப்பை மீண்டும் முழுமையாக நிரப்புவதற்கு குறைந்தது இரண்டு ஆண்டுகள் வரை ஆகலாம் என்று அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
அதேவேளையில், சவூதி அரேபியா, ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் குவைத் ஆகிய வளைகுடா நாடுகள் தங்கள் சொந்த டேங்கர் கப்பல்கள் மூலம் ஹோர்முஸ் வழியாகக் கச்சா எண்ணெய் போக்குவரத்தை அதிகரித்து, போருக்கு முந்தைய நிலைக்கு ஏற்றுமதியை மீட்டெடுக்க தீவிரமாக உழைத்து வருகின்றன.
கடந்த மாதம் தாக்குதலுக்கு உள்ளான சவூதி அரம்கோவின் ‘கிழக்கு-மேற்கு’ பைப்லைன் விரைவாகச் சரிசெய்யப்பட்டு, தற்போது 80% திறனுடன் மீண்டும் இயங்கத் தொடங்கியுள்ளது. இதன் மூலம் செங்கடல் வழியிலும் அதிகமான எண்ணெயை ஏற்றுமதி செய்ய அரம்கோவால் முடிந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

