Last Updated:
வெஸ்ட் இண்டீஸ் தொடரை இந்திய அணி கைப்பற்றினாலும் வேகப்பந்து வீச்சாளர்களின் செயல்பாடு திருப்திகரமாக இல்லை என்ற விமர்சனம் எழுந்தது
கடந்த 2025-ஆம் ஆண்டிற்குப் பிறகு இந்திய சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் விளையாடாத முகமது ஷமி, காயங்கள் மற்றும் உடற்தகுதி காரணமாகத் தொடர்ச்சியாகத் தேர்வு செய்யப்படாமல் புறக்கணிக்கப்பட்டு வருகிறார்.
உள்நாட்டுப் போட்டிகளில் அவர் தொடர்ந்து திறமையை வெளிப்படுத்தி வந்தாலும், இந்திய அணி நிர்வாகம் அவரைத் தாண்டி அடுத்தகட்டத்திற்குச் சென்றுவிட்டது என்றும், மீண்டும் அவரை அணிக்குத் திரும்ப அழைப்பதில் எந்தப் பயனும் இல்லை என்றும் முன்னாள் இந்திய வீரரும் தற்போதைய கிரிக்கெட் விமர்சகருமான தினேஷ் கார்த்திக் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்.
வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான ஒருநாள் தொடரை இந்திய அணி 2-1 என்ற கணக்கில் கைப்பற்றியபோதிலும், அந்தத் தொடரில் இந்திய வேகப்பந்து வீச்சாளர்களின் செயல்பாடு திருப்திகரமாக இல்லை என்ற விமர்சனம் எழுந்தது. பேட்டிங்கிற்கு சாதகமான ஆடுகளங்களாக இருந்தபோதிலும், பந்துவீச்சாளர்கள் ரன்களைக் கட்டுப்படுத்த முடியாமல் திணறினர்.
இருப்பினும், இந்தச் சூழலிலும் முகமது ஷமியை மீண்டும் அணிக்கு அழைப்பது சரியான முடிவாக இருக்காது என்று தினேஷ் கார்த்திக் கூறியுள்ளார். இது தொடர்பாக அவர் அளித்த பேட்டியில், “ஷமி உள்ளூர் போட்டிகளில் சிறப்பாகப் பந்துவீசியிருந்தாலும், இந்திய அணி அவரைத் தாண்டி முன்னோக்கிச் சென்றுவிட்டது. எனவே அவரை மீண்டும் அணிக்குள் கொண்டுவருவதில் அர்த்தமில்லை” என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
தற்போது இந்திய பந்துவீச்சுப் பிரிவில் அர்ஷ்தீப் சிங், முகமது சிராஜ், பிரசித் கிருஷ்ணா போன்ற முன்னணி வீரர்கள் இருக்கும் நிலையில், குர்நூர் பிரார், அகீப் நபி, அன்ஷுல் கம்போஜ் போன்ற இளம் வேகப்பந்து வீச்சாளர்களுக்கும் படிப்படியாக வாய்ப்புகள் வழங்கப்பட்டு வருகின்றன. எதிர்காலத்தைக் கருத்தில் கொண்டு இளம் வீரர்களுக்கு முன்னுரிமை அளிக்கும் நோக்கில் தேர்வுக்குழு செயல்படுவதால், ஷமிக்கு மீண்டும் இந்திய அணியில் வாய்ப்பு கிடைப்பது மிகக் கடினமாகியுள்ளது.


