தேக்கநிலையில் இந்தியா – அமெரிக்கா வர்த்தக பேச்சுவார்த்தை: நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன்
இந்தியா அமெரிக்கா இடையே ஒன்றரை ஆண்டுகளுக்கு மேலாக வர்த்தக ஒப்பந்த பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. இதுவரை பேச்சுவார்த்தையில் முதல் கட்ட ஒப்பந்தம் கூட எட்டப்படவில்லை. இந்நிலையில் இந்த பேச்சுவார்த்தையின் தற்போதைய நிலை குறித்து மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் முக்கியமான தகவலை வெளியிட்டுள்ளார்.
டெல்லியில் நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியில் பேசிய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், இந்தியா – அமெரிக்கா வர்த்தக ஒப்பந்த பேச்சுவார்த்தைகள் தற்பொழுது ஒரு தேக்க நிலையை அடைந்துவிட்டதாக குறிப்பிட்டார். இந்த தேக்கநிலைக்கு பிறகு, இரு நாடுகளும் பரஸ்பரம் ஒரு உடன்பாட்டிற்கு வருவது மிகமிக கடினமான காரியம் என தெரிவித்துள்ளார். இருப்பினும், இரு தரப்பிலும் செயல்படுவதற்கான வாய்ப்புகள் இருந்தால், அதை பயன்படுத்தி கொள்ள இரு நாடுகளும் முயற்சிக்கும் என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

முன்னதாக அமெரிக்க வர்த்தக பிரதிநிதி ஜேமிசன் கிரீர், மத்திய வர்த்தக அமைச்சர் பியூஷ் கோயலை அமெரிக்காவில் சந்தித்து பேசியதை தொடர்ந்து, உடனடி ஒப்பந்தம் எதும் இப்போதைக்கு இல்லை என்று தெரிவித்திருந்தார். இதனை குறிப்பிட்டு பேசிய நிர்மலா சீதாராமன், இருப்பினும் வர்த்தக ஒப்பந்த பேச்சுவார்த்தைகள் தொடர்ந்து நடந்து வருவதாகவும், உடன்பாடுக் எட்டுவதற்கான வாய்ப்புகளை ஆய்வு செய்து வருகிறோம் என்றும் விளக்கமளித்தார்.
2025ஆம் ஆண்டு ஜனவரியில் இந்தியா அமெரிக்கா இடையே வர்த்தக பேச்சுவார்த்தை தொடங்கியது. ஆனால் இதுவரை சில பிரிவுகளில் உடன்பாடு எட்டப்படாமல் உள்ளது. அமெரிக்க வேளாண் பொருட்களுக்கு இந்திய சந்தையை திறக்க வேண்டும் என அமெரிக்கா கூறுகிறது. ஆனால் அது இந்திய விவசாயிகளுக்கு சிக்கலை தரும் என்பதால் மத்திய அரசு மறுப்பு கூறுகிறது. இது போல சில விஷயங்களில் பேச்சுவார்த்தை தேக்கமடைந்து நிற்கிறது.
இரு நாடுகளுமே குறிப்பிட்ட விஷயங்களில் ஒப்பந்தம் எட்டாமல் இருப்பதால் தான் பேச்சுவார்த்தை மிக கடினமானதாக உள்ளது என அதிகாரிகள் கூறுகின்றனர். அமெரிக்க அதிபர் டிரம்ப் ஏற்கனவே வரியை ஒரு ஆயுதமாக பயன்படுத்தி வருகிறார். இந்நிலையில் ஒப்பந்தம் ஏற்பட்டுவிட்டால் அடிக்கடி வரி உயர்வு , மிரட்டல் என்ற பிரச்சினைகளில் இருந்து தீர்வு கிடைக்கும்.
இந்தியாவில் இருந்து ஜவுளி, எலக்ட்ரானிக்ஸ், தோல் பொருட்கள், உணவு பொருட்கள் ஆகியவை அமெரிக்க சந்தைக்கு ஏற்றுமதி செய்யப்படுகின்றன. கடந்த ஆண்டில் டிரம்ப் திடீரென 50% இறக்குமதி வரியை விதித்தார். இதனால் கோடிக்கணக்கான உற்பத்தியாளர்கள் பாதிக்கப்பட்டனர். இந்த சூழலில் அமெரிக்கா இந்தியா வர்த்தக ஒப்பந்தம் இந்த வரி பிரச்சினைகளை தீர்த்து ஏற்றுமதியாளர்களுக்கு நல்ல செய்தியை தரும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால் அது ஒன்றரை ஆண்டுகளாக இழுத்து கொண்டே செல்கிரது.
இந்தியா – அமெரிக்கா இடையிலான வர்த்தக ஒப்பந்த பேச்சுவார்த்தைகள் தீவிரமாக நடைபெற்று வந்தாலும், இரு நாடுகளும் தற்போதைய நிலையில் உடன்பாடுகளை எட்டுவதில் முட்டுக்கட்டையை சந்தித்துள்ளன. இதனை நிதியமைச்சரே வெளிப்படையாக தெரிவித்துள்ளார்.
