International
oi-Vigneshkumar
மாஸ்கோ: ரஷ்யாவின் சைபீரியா பகுதியில் உள்ள ஆய்வகத்தில் ஏற்பட்ட விபத்தில் ஆபத்தான தொற்று நோய் கசிந்ததாக சந்தேகம் எழுந்துள்ளது. இதில் அங்கு பணியாற்றிய 28 வயது பெண் ஆய்வக ஊழியர் உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதேநேரம் ஆய்வகத்தில் இருந்து என்ன வகையான தொற்று லீக் ஆனது.. இதில் மற்றவர்களுக்கு என்ன மாதிரியான பாதிப்பு ஏற்பட்டது என்பது இதுவரை உறுதி செய்யப்படவில்லை.
மருந்துகளை கண்டுபிடிக்க, பயோ போர் என பல விஷயங்களுக்காக வல்லரசு நாடுகள் ஆபத்தான வைரஸ்கள் குறித்த ஆய்வுகளை நடத்தி வரும். இதற்காக உலகெங்கும் பல ஆய்வகங்கள் உள்ள நிலையில், அங்கு மிக பாதுகாப்பாகவே ஆய்வுகள் நடக்கும். ஆனால், சில நேரங்களில் பாதுகாப்பை தாண்டி விபத்து ஏற்பட்டுவிடும். அப்படியொரு சம்பவம் தான் இப்போது ரஷ்யாவில் நடந்துள்ளது.

என்ன நடந்தது!
ரஷ்யாவின் இர்குட்ஸ்க் அருகே உள்ள ஷெலெகோவ் பகுதியில் செயல்படும் ஆன்டி-பிளேக் ஆராய்ச்சி நிறுவனத்தில் எதிர்பாராத விதமாக ஒரு சிறிய சம்பவம் நடந்துள்ளது. இதில் வைரஸ் லீக் நடந்திருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. இதில் ஒருவர் உயிரிழந்துள்ள நிலையில், 200+ பேர் கண்காணிப்பு வளையத்தில் கொண்டு வரப்பட்டுள்ளனர்.
இது தொடர்பான தகவல்களை ரஷ்ய அரசு ஊடகமான டாஸ் தெரிவித்துள்ளது. அந்த ஊழியருக்கு காரணம் தெரியாத நிமோனியா இருப்பது கண்டறியப்பட்டதாக ரஷ்யாவின் தொற்று நோய்களைக் கண்காணிக்கும் ரோஸ்போட்ரெப்நாட்ஸோர் அமைப்பு தெரிவித்துள்ளது. ஆய்வகத்தில் உள்ள அனைவரும் தனிமைப்படுத்தப்பட்டு அவர்களை ரஷ்யா கண்காணித்து வருகிறது.
கண்காணிப்பு
அதேநேரம் இர்குட்ஸ்க் பிராந்தியம், இர்குட்ஸ்க் மற்றும் ஷெலெகோவ் நகரங்களில் தற்போது வரை பெரிய சுகாதார சீர்கேடு எதுவும் ஏற்படவில்லை. நிலைமை சீராக இருப்பதாகவே ரஷ்ய அதிகாரிகள் கூறியுள்ளனர். ஆய்வகத்தில் நடந்த சம்பவம் குறித்த தகவல் கிடைத்த உடனேயே தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
உடைந்த டெஸ்ட் டியூப்
ஆய்வகத்தில் உயிரிழந்த 28 வயது பெண் ஆய்வ ஊழியர் பிளேக் நோயால் பாதிக்கப்பட்டிருக்க வாய்ப்புள்ளதாக தகவல் பரவியது. அந்த ஊழியர் ஆய்வகத்தில் வேலை செய்து கொண்டு இருந்த போது வைரஸ் இருக்கும் ஒரு டெஸ்ட் டியூபை உடைத்துவிட்டாராம். அதன் பிறகு சில நாட்களில் அவருக்கு நிமோனியா ஏற்படவே அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இருப்பினும், அவர் சிகிச்சை பலனில்லாமல் கடந்த அக்டோபர் 1ம் தேதி உயிரிழந்தார்.
கடந்த நூற்றாண்டில் பல கோடி பேரின் உயிரை பறித்த பிளாக் நோய் மீண்டும் பரவுகிறதா என மக்கள் அஞ்சிய நிலையில், அதை ரஷ்ய அதிகாரிகள் மறுத்துள்ளனர். தற்போது வரை புதிய பிளேக் நோய் பரவல் எதுவும் இல்லை என்றும் அவர் கூறினார். பொதுமக்கள் அமைதியாக இருக்குமாறு ரஷ்ய அதிகாரிகள் கேட்டுக்கொண்டுள்ளனர்.
கண்காணிப்பு
அதேபோல அந்த குறிப்பிட்ட ஊழியருடன் நெருங்கிய தொடர்பில் இருந்த அனைவரும் மருத்துவக் கண்காணிப்பில் கொண்டு வரப்பட்டனர். அவர்களிடம் இதுவரை நோய் அறிகுறிகள் இல்லை. பரிசோதனை முடிவுகள் நெகடிவாகவே வந்துள்ளன. மேலும், அந்த ஊழியர் சிகிச்சைக்காக அழைத்து செல்லப்பட்ட ஷெலெகோவ் மருத்துவமனையில் சுமார் 200 பேர் கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆய்வகத்திற்கு அருகில் உள்ள அலுமினிய ஆலையும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தங்கள் ஊழியர்களை மாஸ்க் அணியுமாறு அறிவுறுத்தியுள்ளது. ஆலையின் இயக்குநர் ஆர்டெம் ஃபோமினிக், சம்பவம் தொடர்பாக பல்வேறு வதந்திகளும் முரண்பட்ட தகவல்களும் பரவி வருவதாகவும் ஊழியர்கள் பதற்றமடைய வேண்டாம் எனவும் தெரிவித்துள்ளார்.
பிளேக் நோய்
பிளேக் நோயில் நுரையீரலை பாதிக்கும் வகை மிகவும் ஆபத்தான நோயாக கருதப்படுகிறது. இது சுவாச துகள்கள் மூலம் ஒருவரிடம் இருந்து மற்றொருவருக்கு எளிதில் பரவக்கூடியது. பாதிக்கப்பட்டவர்களுக்கு காய்ச்சல், தலைவலி, உடல் பலவீனம், மூச்சுத் திணறல், நெஞ்சுவலி மற்றும் இருமல் போன்ற அறிகுறிகள் ஏற்படலாம்.
இந்த பிளாக் வைரஸால் இதுவரை பல கோடி பேர் கொல்லப்பட்டுள்ளனர். மிகவும் கொடூரமான வைரஸாக கருதப்படுவதாலேயே இந்த ரஷ்ய ஆய்வக விபத்து தகவல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பிளேக் நோய் உயிரிழப்பை ஏற்படுத்தக்கூடியதாக இருந்தாலும், சரியான நேரத்தில் ஆன்டிபயாடிக்ஸ் மருந்துகள் மூலம் சிகிச்சை அளித்தால் உயிரிழப்புகளை தடுக்கலாம்.
அமெரிக்கா
ரஷ்யாவில் ஏற்பட்டுள்ள இந்த சம்பவத்தை அமெரிக்காவும் உன்னிப்பாக கண்காணித்து வருவதாக அந்நாட்டு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அதே நேரத்தில் சம்பவம் தொடர்பான பல முக்கிய தகவல்கள் இன்னும் உறுதி செய்யப்படவில்லை என்றும், ரஷ்ய அதிகாரிகள் துல்லியமான தகவல்களை விரைவாகவும் வெளிப்படையாகவும் வெளியிட வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

