அங்கீகரிக்கப்படாத புற்றுநோய் மருந்துகளை வழங்கி, அமெரிக்காவின் சுகாதார காப்பீட்டுத் திட்டங்களிடமிருந்து பல மில்லியன் டொலர்களை மோசடியாகப் பெற்றதாகக் குற்றச்சாட்டை எதிர்கொள்ளும் பிரித்தானிய – இந்திய தொழிலதிபர் ஒருவர் நாடுகடத்தப்படும் அபாயத்தை எதிர்கொண்டுள்ளதாக ஐரோப்பிய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
சுகி குமன் (48) எனப்படும் குறித்த தொழிலதிபர் மற்றும் அவரது முன்னாள் மனைவி கிரண்ஜித் குமன் ஆகியோரே அமெரிக்காவுக்கு நாடு கடத்தப்படும் நிலையை எதிர்கொண்டுள்ளதாக கூறப்படுகிறது.
இருவரும் தனித்தனியான மருந்துக் கடத்தல் குற்றச்சாட்டுகளிலும் அமெரிக்க அதிகாரிகளால் தேடப்பட்டு வருவதாக ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
பண இலாப விவகாரம்
அமெரிக்க அரசுத் தரப்பு சட்டத்தரணிகளின் குற்றச்சாட்டின்படி, அமெரிக்காவின் மத்திய சுகாதார காப்பீட்டுத் திட்டமான Medicare-ஐ தவறாக வழிநடத்தி, அங்கீகரிக்கப்பட்ட புற்றுநோய் மருந்துகளை நோயாளிகளுக்கு வழங்குவதாகக் கூறியுள்ளனர்.

ஆனால், அதற்குப் பதிலாக குறைந்த விலையில் கிடைத்த மாற்று மருந்துகளை வழங்கி, இரண்டிற்கும் இடையிலான பண வித்தியாசத்தை மோசடியாகப் பெற்றதாக குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.
இந்த வழக்கு தொடர்பான நாடு கடத்தல் விசாரணை தற்போது லண்டனில் உள்ள Westminster Magistrates’ Court நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது.
எனினும், சுகி குமன் அனைத்து குற்றச்சாட்டுகளையும் கடுமையாக மறுத்துள்ளார். தம்மால் புற்றுநோய் சிகிச்சைக்கான செலவைச் செலுத்த முடியாத நோயாளிகளுக்கு உதவவே முயன்றதாக அவர் ஊடகமொன்றுக்கு தெரிவித்துள்ளார்.
மேலும், குற்றஞ்சாட்டப்பட்ட திட்டத்தின் மூலம் தாம் எந்தவித பண இலாபத்தையும் பெறவில்லை என்றும் அவர் கூறியுள்ளார்.
2023 ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதத்தில், அமெரிக்காவின் கலிபோர்னியா தெற்கு மாவட்ட நீதிமன்றம், சான் டியாகோவில், இருவரையும் கைது செய்வதற்கான பிடியாணையை பிறப்பித்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அங்கீகரிக்கப்படாத மருந்துகள்
2019 செப்டெம்பர் முதல் 2023 ஏப்ரல் வரையிலான காலப்பகுதியை உள்ளடக்கிய விசாரணையில், Medicare உள்ளிட்ட அமெரிக்காவின் பல சுகாதார காப்பீட்டுத் திட்டங்களிடமிருந்து பல மில்லியன் டொலர்களை மோசடியாகப் பெறுவதற்கான திட்டம் கண்டறியப்பட்டதாக அமெரிக்க அரசுத் தரப்பு சார்பில் நீதிமன்றத்தில் முன்னிலையான Peter Caldwell KC தெரிவித்துள்ளார்.

கலிபோர்னியா மற்றும் அரிசோனா மாநிலங்களில் இருவரின் கட்டுப்பாட்டில் இருந்த புற்றுநோய் சிகிச்சை நிலையங்களில், வெளிநாடுகளில் இருந்து குறைந்த விலையில் பெறப்பட்ட, அமெரிக்காவில் அங்கீகரிக்கப்படாத கீமோதெரபி உள்ளிட்ட மருந்துகள் புற்றுநோயாளிகளுக்கு வழங்கப்பட்டதாகவும் வழக்குத் தரப்பு குற்றஞ்சாட்டியுள்ளது.
மேலும், நோயாளிகளுக்கு வழங்கப்பட்ட சில மருந்துகள் அவற்றின் காலாவதி திகதியை கடந்திருந்ததாகவும் விசாரணையாளர்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர்.
இருப்பினும், இக்குற்றச்சாட்டுகள் தொடர்பான இறுதி தீர்ப்பு இதுவரை வழங்கப்படவில்லை.
இந்நிலையில் நாடு கடத்தல் விசாரணையின் முடிவைத் தொடர்ந்து அடுத்த கட்ட சட்ட நடவடிக்கைகள் தீர்மானிக்கப்படவுள்ளன.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்…! |

