Last Updated:
வல்லரசுகளுக்கும், தனியார் விண்வெளி நிறுவனங்களுக்கும் இடையே எதிர்காலத்தில் பெரும் அதிகார மோதல் உருவாகும் என விண்வெளி நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.
நிலவு எந்த நாட்டிற்கு சொந்தம் என்கிற புதிய அதிகாரப் போர் தற்போது தீவிரம் அடைந்திருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
1967-ஆம் ஆண்டில் நிறைவேற்றப்பட்ட வரலாற்றுச் சிறப்புமிக்க ‘வெளி விண்வெளி ஒப்பந்தம்’ மூலம், நிலவு உட்பட விண்வெளியின் எந்தவொரு பகுதியையும் எந்த ஒரு தனி நாடோ அல்லது அமைப்போ உரிமை கொண்டாட முடியாது என்று 100-க்கும் மேற்பட்ட நாடுகள் கூடி முடிவு செய்தன. ஆனால், அரை நூற்றாண்டுக்குப் பிறகு இன்று நிலவின் மீதான அதிகாரம் மற்றும் அங்குள்ள இயற்கை வளங்களைக் கைப்பற்றுவதற்கான போட்டிகள் மீண்டும் சூடுபிடித்துள்ளன.
1950-ஆம் ஆண்டில் எழுத்தாளர் ராபர்ட் ஹெய்ன்லின் எழுதிய ‘தி மேன் ஹூ சோல்ட் தி மூன்’ என்ற அறிவியல் புனைகதையில், தொழிலதிபர் ஒருவர் நிலவின் உரிமையைப் பெற்று ஏலம் விடுவது போலக் காட்டப்பட்டிருக்கும். அன்று கற்பனையாக இருந்த அந்தச் சூழல், இன்று நிஜ உலகிலும் மெல்ல வடிவெடுக்கத் தொடங்கியுள்ளது.
அமெரிக்காவின் நாசா (NASA) நிலவின் தென் துருவப் பகுதியில் அமைந்துள்ள உறைந்த நீர், ஹீலியம் மற்றும் பல்வேறு அரிய கனிம வளங்களைக் கண்டறிந்து அவற்றைப் பயன்படுத்தத் திட்டமிட்டுள்ளது.
சீனாவும் ரஷ்யாவும் இணைந்து அதே நிலவின் தென் துருவப் பகுதியில் தங்களது சொந்த அணுசக்தியால் இயங்கும் ஆராய்ச்சி மையங்களை அமைக்க தீவிரமாகச் செயல்பட்டு வருகின்றன. அரசுகள் மட்டுமின்றி, உலகின் முன்னணி தொழிலதிபர்களும் நிலவை நோக்கி தங்களின் பார்வையைத் திருப்பியுள்ளனர்:
நிலவில் தரவு மையங்கள் (Lunar Data Centers) அமைப்பது மற்றும் விண்கலங்களை விண்வெளியின் ஆழமான பகுதிகளுக்கு ஏவுவதற்கான விண்வெளி மையங்களை உருவாக்குவதன் மூலம் டிரில்லியன் டாலர் மதிப்பிலான புதிய சந்தையை உருவாக்க உலகின் நம்பர் ஒன் பணக்காரர் எலான் மஸ்க் திட்டமிட்டுள்ளார்.
பூமியை ஒரு பசுமையான “பூந்தோட்டமாக” பாதுகாத்துவிட்டு, மாசு ஏற்படுத்தும் கனரகத் தொழிற்சாலைகளை (Heavy Industry) நிலவின் மேற்பரப்பிற்கு மாற்ற வேண்டும் என்ற லட்சியத்தை அமேசான் நிறுவனத்தின் அதிபர் ஜெப் பெசோஸ் கொண்டுள்ளார்.
1967 பன்னாட்டு ஒப்பந்தம் நிலவின் நிலப்பரப்பை யாரும் சொந்தம் கொண்டாடக் கூடாது என்று தெளிவாகக் கூறினாலும், நிலவில் உள்ள கனிமங்கள் மற்றும் நீர் ஆதாரங்களை எடுத்துப் பயன்படுத்துவது குறித்துத் தெளிவான உலகளாவிய வரம்புகள் இல்லை.
இதனால், நிலவின் தென் துருவத்தில் உள்ள குறிப்பிட்ட வளமான பகுதிகளைக் கைப்பற்றுவதில் உலக வல்லரசுகளுக்கும், தனியார் விண்வெளி நிறுவனங்களுக்கும் இடையே எதிர்காலத்தில் பெரும் அதிகார மோதல் உருவாகும் என விண்வெளி நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.

