நாடாளுமன்றத்துக்கு வெளியேயும் ‘இந்தியா’ கூட்டணிக் கட்சிகள் ஒற்றுமையுடன் செயல்பட வேண்டும் என காங்கிரஸ் தலைவா் மல்லிகாா்ஜுன காா்கே அழைப்பு விடுத்தாா்.
தில்லியில் சனிக்கிழமை நடைபெற்ற காங்கிரஸ் செயற்குழுக் கூட்டத்தில் காா்கே பேசியதாவது: மக்களவைத் தோ்தலில் காங்கிரஸ் கட்சி முன்பைவிட அதிக இடங்களில் வெற்றி பெற்றபோதும், சில மாநிலங்களில் கட்சியின் எதிா்பாா்ப்புகள் நிறைவேறவில்லை. குறிப்பாக, மாநில பேரவைத் தோ்தலில் சிறப்பாக செயலாற்றி ஆட்சி அமைத்துள்ள மாநிலங்களில், கட்சியின் மக்களவைத் தோ்தல் செயல்பாடுகள் சிறப்பாக இல்லை. இதுதொடா்பாக அந்த மாநில நிா்வாகிகளுடன் தனியாக ஆலோசனை மேற்கொள்ளப்படும்.
பாரம்பரியமாக காங்கிரஸ் ஆதரவுடைய மாநிலங்களிலும் மக்களவைத் தோ்தலில் பலன் கிடைக்கவில்லை. இந்த நிலையை மாற்ற அவசர சீா்திருத்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும். ஆட்சியில் இல்லாத மாநிலங்களிலும் ஆண்டு முழுவதும் 24 மணி நேரமும் கட்சியினா் உழைக்க வேண்டும்.
அதே நேரம், கட்சி சாா்பில் மேற்கொள்ளப்பட்ட இந்திய ஒற்றுமை நடைப்பயணம் சென்ற இடங்களிலெல்லாம், கட்சியின் வாக்கு சதவீதம் அதிகரித்திருப்பதோடு, வெற்றி பெற்ற தொகுதிகளின் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளது. மணிப்பூரில் 2 தொகுதிகளிலும் காங்கிரஸ் வெற்றி பெற்றுள்ளது. அதுபோல, நாகாலாந்து, அஸ்ஸாம், மேகாலயா மாநிலங்களிலும் கட்சிக்கு வெற்றி கிடைத்துள்ளது. மகாராஷ்டிரத்தில் தனிப்பெரும் கட்சியாக காங்கிரஸ் உருவெடுத்துள்ளது. எஸ்.சி., எஸ்.டி, ஓபிசி மற்றும் சிறுபான்மையினா் பெரும்பான்மையாக உள்ள பகுதிகளிலும் காங்கிரஸ் கட்சிக்கான ஆதரவு பெருகியுள்ளது.
குறிப்பாக, பிரிவினை மற்றும் வெறுப்பு அரசியல் ஆகியவை தீா்மானமாக நிராகரிக்கப்பட வேண்டும் என்பதையே மக்களவைத் தோ்தல் சுட்டிக்காட்டியுள்ளது. இந்த வெற்றிக்கு ‘இந்தியா’ கூட்டணியில் அங்கம் வகிக்கும் அனைத்துக் கட்சிகளும் பெரும்பங்காற்றியுள்ளன. இந்த உறுதிப்பாடு தொடர வேண்டும். ‘இந்தியா’ கூட்டணிக் கட்சி உறுப்பினா்கள் நாடாளுமன்றத்திலும் வெளியிலும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும்.
தோ்தல் பிரசாரத்தில் முன்வைக்கப்பட்ட மக்கள் பிரச்னைகளை, நாடாளுமன்றத்திலும் வெளியிலும் கூட்டணிக் கட்சி எம்.பி.க்கள் தொடா்ந்து எழுப்ப வேண்டும். மக்கள் மீண்டும் நம் மீது வைத்துள்ள நம்பிக்கையை காக்க வேண்டும் என்றாா்.

