கோலாலம்பூர்:
சிப்பாங் அனைத்துலக பந்தயத் திடலில் (SIC) நடைபெற்று வரும் ஃபார்முலா ஒன் (F1) பந்தயத்தின் இரண்டாம் நாளில், அரங்கை விட்டு வெளியேறி இணைப்புப் பேருந்துகளைப் பிடிப்பதற்காகப் பார்வையாளர்கள் 4 மணி நேரத்திற்கும் மேலாக நீண்ட வரிசையில் காத்திருக்க வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது.
இரவு 9.00 மணியைக் கடந்த பின்னரும் பல்லாயிரக்கணக்கான ரசிகர்கள் ஒரே நேரத்தில் வெளியேறியதால், பேருந்து முனையப் பகுதிகளில் கடுமையான கூட்ட நெரிசல் நிலவியதாக ‘Fteenzlkha’ எனும் Threads சமூக வலைதளப் பயனர் பதிவிட்டுள்ளார்.
“நேற்று இரவு 9 மணியளவில் கூட்டம் ஓரளவு குறைந்திருந்தது. ஆனால், இன்று 9 மணியைக் கடந்தும் நிலைமை மிகவும் மோசமாகவே உள்ளது. மக்கள் கூட்டம் கட்டுக்கடங்காமல் அலைமோதுகிறது.” என்று
சமூக வலைதளப் பயனர் ஆதங்கம்.
அதேவேளையில், நேற்றைய முதல் நாள் அனுபவத்திலிருந்து பாடம் கற்றுக்கொண்ட சிப்பாங் நிர்வாகம், இரண்டாம் நாளான இன்று வரிசைகளை முறைப்படுத்தி, கூடுதல் இணைப்புப் பேருந்துகளை இயக்க நடவடிக்கை எடுத்திருந்ததாகப் பல ரசிகர்கள் தெரிவித்துள்ளனர்.
இருப்பினும், பந்தயத்தைக் காண வந்த ரசிகர்களின் எண்ணிக்கை வழக்கத்தை விடப் பல மடங்கு அதிகமாக இருந்ததே இந்த நீண்ட காத்திருப்புக்குக் காரணம் எனக் கூறப்படுகிறது. ஜப்பான், ஸ்பெயின் மற்றும் இமோலா போன்ற சர்வதேச எஃப்1 பந்தயத் திடல்களிலும் போட்டி முடிந்து வெளியேறும் போது இத்தகைய கூட்ட நெரிசல் ஏற்படுவது வழக்கம் தான் என்றும் சிலர் இணையத்தில் கருத்து பகிர்ந்து வருகின்றனர்.



