Last Updated:
இந்தியா-பாகிஸ்தான் டி20 இன்னிங்ஸில் அதிக சிக்ஸர்கள் (7 சிக்ஸர்கள்) அடித்த யுவராஜ் சிங்கின் (2012) சாதனையை அபிஷேக் சர்மா சமன் செய்துள்ளார்.
ஜப்பானில் நடைபெறும் ஆசிய விளையாட்டுப் போட்டிகள் 2026-ன் ஆடவர் கிரிக்கெட் இறுதிப்போட்டியில், இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர் அபிஷேக் சர்மா கிறிஸ் கெய்ல், விராட் கோலி சாதனைகளை முறியடித்துள்ளார். தொடக்கம் முதலே அதிரடி காட்டிய அவர், தனது இன்னிங்ஸில் 7 சிக்ஸர்களைப் பறக்கவிட்டார். சாத் மசூத் வீசிய இரண்டாவது ஓவரிலேயே தனது முதல் சிக்ஸரை அடித்த அவர், தொடர்ந்து பாகிஸ்தான் பந்துவீச்சை எதிர்கொண்டு ரன்களைக் குவித்தார்.
இந்த போட்டியில் அபிஷேக் சர்மா தனது 4-வது சிக்ஸரை அடித்தபோது, டி20 கிரிக்கெட்டில் அதிவேகமாக 400 சிக்ஸர்கள் அடித்த இரண்டாவது வீரர் என்ற பிரம்மாண்ட சாதனையைப் படைத்தார். அவர் 3,513 பந்துகளில் இந்த இலக்கை அடைந்து, மேற்கிந்தியத் தீவுகள் அணியின் பிரபல வீரர் கிறிஸ் கெய்லின் சாதனையை (3,557 பந்துகள்) முறியடித்துள்ளார். இந்த பட்டியலில் ஆண்ட்ரே ரஸல் (3,027 பந்துகள்) முதலிடத்தில் உள்ளார்.
பாகிஸ்தானுக்கு எதிரான போட்டிகளில் அபிஷேக் சர்மா மேலும் பல சாதனைகளைத் தன் வசமாக்கியுள்ளார். ஒரு இந்தியா-பாகிஸ்தான் டி20 இன்னிங்ஸில் அதிக சிக்ஸர்கள் (7 சிக்ஸர்கள்) அடித்த யுவராஜ் சிங்கின் (2012) சாதனையை அபிஷேக் சர்மா சமன் செய்துள்ளார்.
இந்தியா – பாகிஸ்தான் டி20 போட்டிகளில் ஒட்டுமொத்தமாக அதிக சிக்ஸர்கள் (14 சிக்ஸர்கள்) அடித்த வீரர் என்ற சாதனையைப் படைத்துள்ளார். இதன் மூலம் விராட் கோலியின் (11 சிக்ஸர்கள்) சாதனையை அவர் கடந்துள்ளார். ஒரே நாட்காட்டி ஆண்டில் (Calendar Year) அதிவேகமாக 100 டி20 சிக்ஸர்களைக் கடந்த வீரர்கள் பட்டியலில் 651 பந்துகளில் எட்டி இரண்டாவது இடத்தை பிடித்துள்ளார்.
ஆசிய விளையாட்டு டி20 கிரிக்கெட் இறுதிப் போட்டியில் பாகிஸ்தானை வீழ்த்தி இந்தியா தங்கம் வென்றுள்ளது. முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 211 ரன்கள் என்ற வலுவான நிலையை எட்டியது.
இதையடுத்து 212 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய பாகிஸ்தான் அணி வீரர்கள் ரன்களை குவிக்க தடுமாறினர். இறுதியாக இந்திய அணி 19 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தங்கம் வென்றது.
இந்த வெற்றியின் மூலம் வைபவ் சூர்யவன்ஷி புதிய சாதனை படைத்தார். அதாவது, ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் தங்கப் பதக்கம் வென்ற மிக இளம் வயது இந்தியர் என்கிற பெருமையை பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.


