ஐடி ஊழியர்களுக்கு ஆனந்தக் கண்ணீர் வரவழைத்த விப்ரோ.. பென்ச் கொள்கையில் பெரும் மாற்றம்..!!
ஒட்டுமொத்த ஐடி சேவைத் துறையும் பெரிய அளவில் மாற்றம் கண்டு வரும் இந்த ஏஐ யுகத்தில் ஒவ்வொரு ஊழியரும் நிறுவனத்திற்கு வருமானம் ஈட்டி தரும் அளவில் இருக்க வேண்டும், ஒரு மணிநேரமும் எப்படிக் கூடுதலான வருவாய் ஈட்டுவது என்பதை நிறுவனங்கள் ஆலோசனை செய்து வருகிறது.
இதனால் டிசிஎஸ், இன்போசிஸ், கானிசென்ட் நிறுவனங்கள் ஊழியர்களுக்கான பென்ச் காலகட்டத்தைப் பாதியாகக் குறைந்து வர்த்தகத்திற்குத் தேவையான திறனை வளர்த்துக்கொண்டு பில்லிங்கில் வர வேண்டும் என நிர்ப்பந்தம் செய்து வருகிறது. ஆனால் விப்ரோ, சந்தை போக்கிற்குச் சற்று மாறுபட்ட முடிவை எடுத்துள்ளது.

இந்திய ஐடி சேவை துறையில் அதிகப்படியான சரிவை எதிர்கொண்டு வரும் விப்ரோ தனது ஜூனியர் மற்றும் மிட் லெவல் ஊழியர்களுக்கு அதாவது Band 2 மற்றும் அதற்குக் கீழ் இருக்கும் ஊழியர்களுக்கு 180 நாள் அதாவது 6 மாதம் வரையில் பென்ச் காலத்தைக் கொடுத்துள்ளது. இப்புதிய கொள்கை அக்டோபர் 1ஆம் தேதி முதல் நடைமுறைக்கு வரும் எனவும் அறிவித்துள்ளது.
இந்த ஒரு அறிவிப்பால் ப்ராஜெட்டில் இருந்து வெளியே வரும் ஒரு ஊழியர் 6 மாதத்திற்கு எவ்விதமான பணியும் இல்லாமல் சம்பளம் பெறலாம், அதேபோல் இந்த 6 மாதங்களுக்குள் தேவையான திறனை வளர்த்துக்கொண்டு பில்லிங்கிற்குள் நுழைய வேண்டும் எனத் தெரிவித்துள்ளது.
டிசிஎஸ் சமீபத்தில் ஊழியர்களின் பில்லிங் முறையிலும், அலுவலகத்திற்கு வந்து பணியாற்றும் முறையிலும் பெரிய அளவிலான மாற்றத்தைச் செய்துள்ளது. உதாரணமாக டிசிஎஸ் ஊழியர்கள் குறைந்தபட்சம் வருடத்தில் 225 நாள் பில்லிங் செய்யப்பட்டு இருக்க வேண்டும் என்ற கட்டுப்பாட்டை வைத்துள்ளது. இதோடு பென்ச் காலத்தை 35 நாட்களாக குறைத்துள்ளது.
டிசிஎஸ் மட்டுமல்லாமல் காக்னிசென்ட்-ம் பென்ச் காலகட்டத்தை 60 நாளில் இருந்து 35 நாட்களாகக் குறைத்துள்ளது. இன்போசிஸ், ஹெச்சிஎல், டெக் மஹிந்திரா ஆகியவை பென்ச் காலகட்டத்தைக் குறைத்துள்ளது மட்டும் அல்லாமல் புதிய தொழில்நுட்பம், அல்லது தற்போதைய வாடிக்கையாளர்கள் தேவைக்கு ஏற்ப புதிய தொழில்நுட்பத்தை கற்றுக்கொண்டு ப்ராஜெக்ட்டில் சேர்ந்து பில்லிங் செய்ய வேண்டும் என்ற கடுமையான கொள்கையை வைத்துள்ளது.
மேலும் இந்த காலகட்டத்திற்குள் ப்ராஜெக்ட்டுக்குள் நுழைய முடியாதவர்கள் நிறுவனத்தை விட்டு வெளியேற வேண்டும் என்ற நிலைப்பாட்டையும் கொண்டு உள்ளது.
விப்ரோவின் இந்த 180 நாள் பென்ச் காலம் என்பது Band 2 கீழ் இருக்கும் ஊழியர்களுக்கு மட்டும் அல்லாமல் வெளிநாட்டில் இருந்து இந்தியா திரும்பிய ஊழியர்களுக்கும் பொருந்தும். மேலும் Band 3 மற்றும் அதற்கு மேல் இருக்கும் ஊழியர்களுக்கு 45 நாட்கள் பென்ச் காலம் தொடரும் எனவும் விளக்கம் கொடுத்துள்ளது.
விப்ரோ இத்தகைய முடிவை எடுக்க முக்கிய காரணம் அதன் ஊழியர்கள் எண்ணிக்கை மற்றும் Workforce Pyramid அடிப்படையில் எடுத்துள்ளதாக விளக்கம் கொடுத்துள்ளது. அதாவது மிட் லெவல் ஊழியர்கள் எண்ணிக்கை குறைவாக இருக்கும் நிலையிலும், புதிய ஊழியர்களை அதிகம் சேர்ப்பதை விரும்பாத நிலையில் பென்ச் காலத்தை அதிகரித்துள்ளதாகத் தெரிகிறது.

