Last Updated:
Asian Games | இந்திய அணி 19 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தங்கம் வென்றது. தங்கம் வென்ற இந்திய அணியில் தமிழ்நாடு வீரர் வாஷிங்டன் சுந்தர் 4 ஓவர்கள் வீசி 2 விக்கெட்களை வீழ்த்தினார்.
ஆசிய விளையாட்டு டி20 கிரிக்கெட் இறுதிப் போட்டியில் பாகிஸ்தானை வீழ்த்தி இந்தியா தங்கம் வென்றது. இந்தப் போட்டியில் வைபவ் சூர்யவன்ஷி புதிய சாதனை படைத்தார்.
ஜப்பானில் நடைபெற்று வரும் ஆசிய விளையாட்டு போட்டி டி20 கிரிக்கெட் இறுதிப்போட்டியில் இந்தியா – பாகிஸ்தான் அணிகள் இன்று மோதின. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. இதைத் தொடர்ந்து இந்திய அணியின் தொடக்க வீரர்களாக அபிஷேக் சர்மா மற்றும் வைபவ் சூர்யவர்ஷினி களமிறங்கினர்.
தனது வழக்கமான அதிரடியை தொடங்கிய வேகத்தில் வைபவ் 15 ரன்களிலும் சஞ்சு சாம்சன் 2 ரன்களிலும் அவுட்டாகினர். கேப்டன் ஷ்ரேயாஸ் ஐயர் நிதானமாக விளையாடி 21 ரன்னில் பெவிலியன் திரும்பினார். ஒருபுறம் விக்கெட் வீழ்ந்தாலும் மற்றொரு தொடக்க வீரர் அபிஷேக் சர்மா அதிரடியாக விளையாடி 28 பந்துகளில் 61 ரன்கள் சேர்த்தார்.
இறுதி ஓவர்களில் அதிரடி காட்டிய திலக் வர்மா 22 பந்துகளில் 51 ரன்கள் அடித்தார். இவர்கள் இருவரின் அதிரடியான ஆட்டத்தால் இந்திய அணி 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 211 ரன்கள் என்ற வலுவான நிலையை எட்டியது. பாகிஸ்தான் சார்பில் அஹ்மத் தனியல் மற்றும் அரஃபாத் மின்ஹாஸ் தலா 2 விக்கெட்களை வீழ்த்தினர்.
இதையடுத்து 212 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய பாகிஸ்தான் அணி வீரர்கள் ரன்களை குவிக்க தடுமாறினர். தொடக்க வீரர்கள் சாஹிப்ஸாதா ஃபர்ஹான் (10), மாஸ் சதகத் (23), உஷ்மான் கான் (3) என்ற ரன்களில் அவுட்டாகினர். அசன் நவாஸ் அதிரடியாக விளையாடி 96 ரன்கள் எடுத்து கடைசி பந்தில் அவுட்டானார். இறுதியாக இந்திய அணி 19 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தங்கம் வென்றது. தங்கம் வென்ற இந்திய அணியில் தமிழ்நாடு வீரர் வாஷிங்டன் சுந்தர் 4 ஓவர்கள் வீசி 2 விக்கெட்களை வீழ்த்தினார்.
இந்த வெற்றியின் மூலம் வைபவ் சூர்யவன்ஷி புதிய சாதனை படைத்தார். அதாவது, ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் தங்கப் பதக்கம் வென்ற மிக இளம் வயது இந்தியர் என்கிற பெருமையை பெற்றார். 2018-ஆம் ஆண்டு ஜகார்த்தாவில் நடைபெற்ற ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் ஆடவர் 10 மீட்டர் ஏர் பிஸ்டல் பிரிவில் தங்கம் வென்ற இந்திய துப்பாக்கி சுடும் வீரர் சௌரப் சௌத்ரியே ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் தங்கப் பதக்கம் வென்ற மிக இளம் வயது இந்தியர். சௌரப் சௌத்ரி அந்த சாதனை படைத்த போது அவருக்கு 16 வயது மட்டுமே.
அவரை முந்தி சூர்யவன்ஷி 15 வயது, ஆறு மாதம் மற்றும் ஏழு நாட்களில் பதக்கம் வென்ற இரண்டாவது இளம் இந்தியர் என்ற பெருமையையும் பெற்றார். இந்த சாதனை பட்டியலில் முதலிடத்தில் இருப்பது சஞ்சனா பதுலா என்பவர். 2023-ஆம் ஆண்டு ஹாங்சோவில் நடைபெற்ற பெண்களுக்கான ஸ்பீட் ஸ்கேட்டிங் 3000 மீட்டர் ரிலே போட்டியில் சஞ்சனா பதுலா வெண்கலம் வென்றபோது அவருக்கு 15 வயது, மூன்று மாதம் மற்றும் 11 நாட்கள் ஆகியிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.


