International
oi-Hema Vandhana
வாஷிங்டன்: அமெரிக்காவின் டென்னசி மாகாணத்தில் ஒரு பெண்ணுக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட இருந்தது… அதற்கான ஏற்பாடுகள் எல்லாம் முடிந்து, மரண ஊசியும் போடப்பட்டது. ஆனால் அடுத்த சில நிமிடங்களில் மொத்த நிலைமையும் தலைகீழாக போனது.. அந்த பெண் கண்விழித்து அமைதியாக பார்த்து கொண்டிருந்தார்.. இந்த சம்பவம்தான் 2 நாட்களாகவே அமெரிக்காவில் பேசப்பட்டு வருகிறது.
டென்னசி மாகாணத்தை சேர்ந்தவர் கிறிஸ்டா பைக்… 1995-ம் ஆண்டு, இவர் 19 வயது இளம்பெண் ஒருவரை கொன்று விட்டார்.. இந்த கொலை வழக்கில் பைக்குக்கு 1996-ல் மரண தண்டனை விதிக்கப்பட்டது. அப்போது பைக்குக்கு வெறும் வயது 18தான்..

அமெரிக்க கொலையாளி பெண்
இந்த கொலைக்கு தன்னுடைய காதலன் டாடரில் ஷிப்பையும் துணைக்கு வைத்து கொண்டார்.. இந்த கொலையை செய்தபோது, காதலனுக்கு 18 வயது முழுமையாக முடியவில்லை.. அதனால் சட்டப்படி அவர் சிறார் என்பதால், மரண தண்டனை விதிக்கப்படாமல் ஆயுள் தண்டனை அப்போது வழங்கப்பட்டது.
பைக்குக்கு மட்டும் மரண தண்டனை தரப்பட்டது.. டென்னசி மாகாணத்திலேயே மரண தண்டனை வரிசையில் இருந்த ஒரே பெண்ணாக பைக் மட்டுமே இருந்தார். அதுமட்டுமல்ல, 200 ஆண்டுகளுக்கும் மேலான காலத்துக்குப் பிறகு அந்த மாகாணத்தில் மரண தண்டனை கிடைத்த பெண், பைக் மட்டுமே. அதனால்தான், இந்த வழக்கு ஆரம்பத்திலிருந்தே அதிக கவனம் பெற்றது.
மரண தண்டனை
கடந்த செப்டம்பர் 30-ம் தேதி இரவு, டென்னசியில் உள்ள ரிவர்பெண்ட் சிறையில், பைக்கின் மரண தண்டனையை நிறைவேற்ற முடிவானது.. அதற்கான ஏற்பாடுகளும் நடந்தன. ஆனால் மரண தண்டனை நிறைவேற்றப்படுவதற்கு சில மணி நேரங்களே இருந்த நிலையில், பைக்கின் வழக்கறிஞர்கள் நீதிமன்றத்தை அணுகி, தண்டனையை நிறுத்தி வைக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர். இதை ஏற்ற நீதிமன்றம், கடைசி நேரத்தில் மரண தண்டனைக்கு தற்காலிகமாக தடை விதித்தது.
ஆனால் இந்தத் தடை நீண்ட நேரம் நீடிக்கவில்லை… அமெரிக்க சுப்ரீம் கோர்ட்டில் இந்த விவகாரம் சென்றது. அங்கு, ஏற்கெனவே விதிக்கப்பட்டிருந்த அந்தத் தடையை நீக்கி, மரண தண்டனையை நிறைவேற்றுவதற்கு அனுமதி அளிக்கப்பட்டது. இதையடுத்து பைக்கின் தண்டனையை நிறைவேற்ற ஏற்பாடுகள் ஆரம்பமாகின..
2 விஷ ஊசிகள்
முதலில் பைக்குக்கு pentobarbital என்ற ஊசி செலுத்தப்பட்டது.. இது மரணத்துக்காக செலுத்தப்படும் ஊசி மருந்தாகும்.. நரம்பில் இந்த ஊசியை போட்டதுமே, உடலின் நரம்பு மண்டலமே செயலிழக்க துவங்கி விடுமாம்.. ஆனால், முதல் ஊசியை செலுத்திய பிறகும், பைக் உயிருடனேயே இருந்தார்.
இதை பார்த்து அதிர்ந்த சிறை டாக்டர்கள், நடைமுறையின்படி 2-வது ஊசியை செலுத்தினர்கள்.. அப்போதும் பைக்கின் இதயத்துடிப்பு நின்றதாக தெரியவில்லை… அதற்கு பதிலாக, மூச்சு விடும் சத்தமும், குறட்டை சத்தமும் கேட்டுள்ளது.. இதை பார்த்த பைக்கின் வழக்கறிஞர்கள், மறுபடியும் கோர்ட்டுக்கு ஓடினார்கள்.. அவசர மனு ஒன்றை தாக்கல் செய்தனர்.. அதில், , 2 மரண ஊசிகள் செலுத்தப்பட்டும் பைக் இன்னும் உயிருடன் இருப்பதாக தெரிவித்தனர். இதனால் நீதிமன்றமும் குழம்பியது.
7 முறை குத்தப்பட்ட ஊசி
இதற்கு பிறகுதான் அந்த அதிர்ச்சிகரமான உண்மை வெளியே வந்தது.. அதாவது மரண ஊசி போடுவதற்காக, சிறை மருத்துவ ஊழியர்கள், பைக்கின் கையில் நரம்பை கண்டுபிடித்து, மருந்து செலுத்தும் குழாயை பொருத்த முயன்றுள்ளனர். ஆனால் நரம்பு சரியாக கிடைக்காமல் பலமுறை முயற்சி செய்திருக்கிறார்கள்.. குறைந்தது 7 முறை ஊசி போட்டு முயற்சி செய்து, அதற்கு பிறகே பைக்கின் நரம்பை கண்டுபிடித்துள்ளனர்.. ஆனால், அதற்குள் 7 முறை ஊசி குத்தியதில், ஒரு ஊசி வளைந்தே விட்டதாம்.
இதுகுறித்து பைக்கின் வழக்கறிஞர்கள் கோர்ட்டில் வாதாடும்போது, “மரண ஊசி மருந்து செலுத்தும்போது, மருந்து ரத்த நாளத்துக்குள் சரியாக செல்லாமல், தோலுக்கு அடியில் உள்ள பகுதியில் சென்றிருக்கலாம்.. ஊசி போடப்பட்ட இடங்களில் பைக்கின் கைகள் வீங்கி, கொப்புளங்களும் ஏற்பட்டுள்ளன.. இதனால் பைக்கின் உடல்நிலை கவலையாக இருக்கிறது..
அவருக்கு ரத்தத்தில் தட்டணுக்கள் அதிகமாக இருக்கும் ஒரு பிரச்சனையும் உள்ளது.. அவரது ரத்த நாளங்கள் சிறியதாக இருப்பதால் ஊசி போடுவதில் சிரமம் ஏற்படலாம்.. 2 முறை ஊசியை குத்தியதில், மருந்தும் சரியாக ரத்த ஓட்டத்தில் சென்றிருந்தால் பைக் உயிரிழந்திருக்க வேண்டும்.. ஆனால், மருந்து ரத்த நாளுக்குள் செல்லாமல் திசுக்களில் சென்றிருக்கலாம்” என்று வாதிட்டனர்.
அதேசமயம், பயன்படுத்தப்பட்ட ஊசி மருந்து சரியாக சேமிக்கப்படாமல் அதன் வீரியம் குறைந்திருக்குமா என்ற கேள்வியையும் பைக்கின் தரப்பு எழுப்பியுள்ளது.
ஆய்வு நடத்த ஆளுநர் உத்தரவு
ஆனால் டென்னசி சிறைத்துறை இதை ஏற்கவில்லை. மருந்தை குறை சொல்வதையும் ஏற்கவில்லை.. இருந்தாலும், பைக்கை என்ன செய்வது என்ற குழப்பத்தில் உள்ளது.. 2 முறை விஷ ஊசி செலுத்தவே நடைமுறை உள்ளது.. 2வது விஷ ஊசி செலுத்தியும் கைதி உயிருடன் இருந்தால் அடுத்து என்ன செய்ய வேண்டும் என்பது மாநிலத்தின் நடைமுறையில் தெளிவாக குறிப்பிடப்படவில்லையாம்.
இதனால் பைக்கின் வழக்கில் 2 முறை மரண ஊசி செலுத்தியும் அவர் உயிருடன் இருந்தது எப்படி? அந்த மருந்து உடலுக்குள் எப்படி சென்றது? IV line சரியாக அமைக்கப்பட்டதா? மருந்தில் ஏதாவது பிரச்சனை இருந்ததா? தண்டனை நிறைவேற்றுவதில் நடைமுறையில் என்ன தவறு நடந்தது? என்றெல்லாம் ஆய்வு நடத்த சொல்லி உத்தரவிட்டுள்ளார் டென்னசி ஆளுநர்.. அத்துடன் 2026-ல் மாகாணத்தில் நடைபெற இருந்த அடுத்தடுத்த மரண தண்டனைகளையும் நிறுத்தி வைத்து உத்தரவிட்டுள்ளார்.
கிரேட் எஸ்கேப் ஆன பெண்
இப்போது கிரேட் எஸ்கேப் ஆகியுள்ள பைக்கை ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு கொண்டு சென்றிருக்கிறார்கள்.. அவரது 2 கைகளிலும் ஏற்பட்ட காயங்கள் மற்றும் மருந்தின் தாக்கத்துக்காக டாக்டர்கள் சிகிச்சை தந்து வருகிறார்களாம்.. இந்த சந்தர்ப்பத்தை பைக்கின் வழக்கறிஞர்கள் மறுபடியும் பயன்படுத்தி கொள்ள முனைந்துள்ளனர்.. பைக்கின் மரண தண்டனையை வேறு தண்டனையாக மாற்ற வேண்டும் என்று கோரிக்கையும் வைத்துள்ளனர்.
ஆரம்பத்திலிருந்தே பைக்கை தண்டனையிலிருந்து காப்பாற்ற போராடி கொண்டிருக்கும் அவரது வழக்கறிஞர்கள்தான் சோஷியல் மீடியாவில் கவனம் பெற்று வருகிறார்கள்.. எனினும் பைக்குக்கு மீண்டும் மரண தண்டனை நிறைவேற்றப்படுமா, அல்லது அவரது வழக்கறிஞர்கள் எப்படியாவது அவரை காப்பாற்றி விடுவார்களா? என்று தெரியவில்லை.. பொறுத்திருந்து பார்ப்போம்!!

