விமானக் கடத்தல் முயற்சியின் பின்னணியில் தீவிரவாத சதி இருப்பதாக சந்தேகிப்பதாக இஸ்ரேல் வெளியுறவு அமைச்சர் தெரிவித்துள்ளார்.
இந்தச் சம்பவத்தின் பின்னணியில் யார் இருந்தார்கள் என்பதையும், இது ஒரு பரந்த பயங்கரவாத சதித்திட்டத்தின் ஒரு பகுதியா என்பதையும் கண்டறிய புலனாய்வாளர்கள் இன்னும் பணியாற்றி வருவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
இச்சம்பவத்துடன் ஈரானுக்கு தொடர்பு உள்ளதா என்பது குறித்து தற்போது உறுதியாகக் கூற முடியாது என இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு தெரிவித்துள்ளார்.
துணை விமானி கைது
கடந்த 30 ஆம் திகதி இடம்பெற்ற இந்தச் சம்பவத்தில், ஓமனைச் சேர்ந்த துணை விமானி விமானத்தை கடத்த முயன்றதாகக் கூறப்படுகிறது.

இந்திய விமானி ஸ்மித் மச்சார் உள்ளிட்டோர் மேற்கொண்ட நடவடிக்கையால் முயற்சி முறியடிக்கப்பட்டதுடன், விமானம் சவூதி அரேபியாவின் தபூக் நகரில் பாதுகாப்பாக தரையிறக்கப்பட்டது.
இதையடுத்து கைது செய்யப்பட்ட ஓமன் நாட்டைச் சேர்ந்த துணை விமானி ஐக்கிய அரபு அமீரக அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளார்.
இந்தச் சம்பவத்தில் விமானத்தில் பயணித்த 174 பேரின் உயிர்கள் காப்பாற்றப்பட்டதாக ஐக்கிய அரபு அமீரக அதிபரின் ஆலோசகர் அன்வர் கார்கேஷ் தெரிவித்துள்ளார்.
தன் உயிரைப் பணயம் வைத்து 182 அப்பாவி பயணிகளின் உயிரைக் காப்பாற்றிய இந்திய விமானி ஸ்மித் மச்சார், தற்போது அபுதாபியில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்று நலம் பெற்று வருகிறார்.
கடுமையான தாக்குதல் நடத்தப்படும்
இது குறித்து அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் வெள்ளை மாளிகையில் அளித்த பேட்டியில், ‘இந்த கொடூரத் தாக்குதலில் ஈரானுக்கு தொடர்பு உள்ளதா என்பது குறித்து தீவிரமாக விசாரித்து வருகிறோம்.

இதில் ஈரானின் தொடர்பு இருப்பது உறுதி செய்யப்பட்டால் அந்நாட்டின் மீது மிகக் கடுமையான தாக்குதல் நடத்தப்படும்’ என்று பகிரங்கமாக எச்சரித்தார்.
டுபாயிலிருந்து டெல் அவிவ் நோக்கி சென்ற “ஃபிளை துபாய்” விமானத்தை கடத்த முயற்சி செய்த சம்பவம் திட்டமிட்ட தீவிரவாதச் செயல் என ஐக்கிய அரபு அமீரகம் தெரிவித்துள்ளது.
மறுபுறம், இந்த தீவிரவாத சதி தொடர்பாக ஓமன், அமெரிக்கா, சவூதி மற்றும் இஸ்ரேல் ஆகிய நாடுகள் இணைந்து தீவிர கூட்டு விசாரணை மேற்கொண்டு வருகின்றன. சதிகார இணை விமானியை தங்களிடம் ஒப்படைக்குமாறு இஸ்ரேல் கோரிக்கை விடுத்துள்ளது.

