கோலாலம்பூர்:
தனது முதலாளியின் 18 வயது மகளை வணிக வளாகக் கழிப்பறைக்குள் இழுத்துச் சென்று பாலியல் பலாத்காரம் செய்த குற்றச்சாட்டிற்காக 71 வயது உணவக ஊழியர் ஒருவரைப் போலிஸார் கைது செய்து, 7 நாட்கள் தடுப்புக் காவலில் எடுத்துள்ளனர்.
சந்தேக நபரைக் காவல் துறையினர் தீவிர விசாரணைக்கு உட்படுத்துவதற்காக, வரும் வியாழக்கிழமை வரை 7 நாட்கள் தடுப்புக் காவல் வழங்கப் பினாங்கு மாவட்ட நீதிமன்ற நீதிபதி எஸ். செல்வரஞ்சனி உத்தரவிட்டார்.
“சம்பவத்தன்று மாலை 4.30 மணியளவில் சந்தேக நபர் பாதிக்கப்பட்ட பெண்ணைப் பேர்சியாரான் கர்னி (Persiaran Gurney) பகுதியில் உள்ள வணிக வளாகத்திற்கு அழைத்துச் சென்றுள்ளார். அங்கு இரண்டாம் தளத்தில் உள்ள ஆண்கள் கழிப்பறைக்குள் அப்பெண்ணைப் பலவந்தமாக இழுத்துச் சென்று பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டுள்ளார்” என்று, பினாங்கு மாநிலக் காவல் துறை வெளியிட்டுள்ள ஓர் அறிக்கையில் தெரிவித்துள்ளது.
வணிக வளாகத்தின் மற்றொரு ஆடவர் கழிப்பறைக் கதவைத் தட்டிய பின்னரே அத்துமீறல் நிறுத்தப்பட்டது. அதன்பின்னர், சந்தேக நபர் அப்பெண்ணுக்குச் சில பணத்தைக் கொடுத்து, அவரது தந்தையின் கடைக்கே மீண்டும் கொண்டு போய் விட்டுள்ளார்.
இச்சம்பவத்தால் அதிர்ச்சியடைந்த அந்த இளம் பெண், தனக்கு நேர்ந்த கொடூரத்தைக் குடும்பத்தினரிடம் தெரிவித்ததைத் தொடர்ந்து போலீசில் புகார் அளிக்கப்பட்டது. அதன் பேரில் முதியவர் உடனடியாகக் கைது செய்யப்பட்டார். இச்சம்பவம் தொடர்பாகக் குற்றவியல் சட்டப் பிரிவு 376 (பலாத்காரம்) மற்றும் பிரிவு 377C (இயற்கைக்கு மாறான பாலியல் குற்றம்) ஆகியவற்றின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.



