H1B விசா தொடர்ந்து இந்தியர்களுக்கு அடுத்த வேட்டு வைக்கும் அமெரிக்கா.. EB-5 விசா கட்டணம் 114% உயர்வு!
அமெரிக்காவின் குடியுரிமை அமைப்பான USCIS அக்டோபர் 1ஆம் தேதி முதல் அந்நாட்டில் பணியாற்ற அனுமதிக்கும் H1B விசா தேர்வு முறையில் லாட்டரி முறையை நீக்கிவிட்டு அதிக சம்பளம் பெறும் வேலைவாய்ப்புகளுக்கு (அதிக திறன் தேவைப்படும் வேலைவாய்ப்புகளுக்கு) முன்னுரிமை அளிக்கும் வகையில் புதிய தேர்வு முறையைக் கொண்டு வந்துள்ளது. இந்த நிலையில் அடுத்த முட்டுக்கட்டையாக முதலீடு செய்வதன் வாயிலாகப் பெறப்படும் EB-5 விசாவுக்கு வந்துள்ளது.
அமெரிக்காவில் முதலீடு செய்து வேலைவாய்ப்பு உருவாக்குவது மூலம் கிரீன் பெறும் வாய்ப்பை EB-5 விசா முதலீட்டாளர்களுக்கும், அவரின் குடும்பத்திற்கும் வழங்குகிறது. அமெரிக்காவில் செட்டிலாக வேண்டும் என திட்டமிடும் பலர் இந்க வழியைத் தேர்வு செய்து வரும் நிலையில் USCIS அமைப்பு இந்த விசாவுக்கான கட்டணத்தை நவம்பர் 30, 2026 முதல் உயர்த்தப்பட உள்ளதாக அறிவித்துள்ளது.

EB-5 மூலம் முதலீடு செய்யும் 90 சதவீத மக்கள் அமெரிக்காவில் தனியாக நிறுவனத்தைத் துவங்குவதைத் தாண்டி குழுவாக இணைந்து முதலீடு செய்யும் முறையைத் தான் தேர்வு செய்வார்கள்.
இதற்காக regional-centre investors என்ற தனிப்பிரிவு உள்ளது. இவ்வழியாக விண்ணப்பம் செய்யும் விண்ணப்பத்திற்கு தற்போது 3675 டாலர் வசூலிக்கப்பட்டு வந்தது, ஆனால் நவம்பர் 30ஆம் தேதிக்குப் பின்பு இத்தொகை 7850 டாலராக உயர்த்தப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டு உள்ளது. இந்த ஒரே அறிவிப்பு மூலம் சுமார் 114 சதவீதம் கட்டணம் உயர்ந்துள்ளது.
மேலும் இன்டிகிரெட்டி பண்ட் கட்டணம் 1000 டாலரில் இருந்து 1100 டாலராக உயர்த்தப்பட்டு உள்ளது.
இதுவே தனியாக முதலீடு செய்யும் EB5 விசா வாங்கத் திட்டமிடுவோருக்கான விண்ணப்பக் கட்டணம் 3675 டாலரில் இருந்து 7615 டாலர் வரையில் உயர்த்தப்பட உள்ளது. இதன் மூலம் ஒரு முதலீட்டாளர் 4675 டாலர் செலுத்த வேண்டிய இடத்தில் இனி 8950 டாலர் வரையில் செலுத்த வேண்டும்.
EB-5 விசா இந்தியர்களுக்கு மிகவும் முக்கியமானதாக விளங்குகிறது, கிரீன் கார்டு பெறுவதற்கான EB2, EB3 வழித்தடங்கள் மூலம் விண்ணப்பம் செய்தவர்களுக்கு நீண்ட காலம் காத்திருக்க வேண்டிய நிலையில் EB5 மிக முக்கிய வழியாக இருந்து வருகிறது.

