India
oi-Nantha Kumar R
கவுஹாத்தி: ஹே.. எங்க இவ்வளவு அவசரமா போற.. முதல்வர் வராருல்லா என்று அசாம் முதல்வர் ஹிமாந்த பிஸ்வா சர்மாவின் வாகனம் செல்வதற்காக ஆம்புலன்ஸை போலீசார் தடுத்து நிறுத்திய சம்பவம் சர்ச்சையை கிளப்பியது. இந்த வீடியோ வெளியாகி விமர்சனங்களை ஏற்படுத்திய நிலையில் 2 எஸ்ஐ உள்பட 4 பேர் அதிரடியாக சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர்.

அசாம் மாநிலத்தில் பாஜகவின் ஆட்சி நடக்கிறது. முதல்வராக ஹிமாந்த பிஸ்வா சர்மா உள்ளார். அக்டோபர் 3ம் தேதி நடைபெற உள்ள உள்ளாட்சி தேர்தலையொட்டி நேற்று சிலிசார் பகுதி பிரசாரத்துக்கு ஹிமாந்த பிஸ்வா சர்மா சென்றார்.
இந்த சமயத்தில் ஹிமாந்த பிஸ்வா சர்மாவின் வாகனம் செல்வதற்காக ஆம்புலன்ஸ் தடுத்து நிறுத்தப்பட்டது. ராம்நகர் ஐஎஸ்பிடி பகுதியில் ஹிமாந்த பிஸ்வா சர்மாவின் வாகனம் மற்றும் அவரது பாதுகாப்பு வாகனங்கள் அணிவகுத்து சென்றன.
இந்த சமயத்தில் ஆம்புலன்ஸ் ஒன்று வேகமாக வந்தது. முதல்வர் வாகனம் வருவதை அறிந்தவுடன் அங்கிருந்த போலீசார் ஆம்புலன்ஸை தடுத்து நிறுத்தினர். முதல்வர் ஹிமாந்த பிஸ்வா சர்மாவின் வாகனங்கள் சென்ற பிறகு அந்த ஆம்புலன்ஸ் அங்கிருந்து புறப்பட்டு சென்றது. ஆம்புலன்ஸை தடுத்து நிறுத்தில் ஹிமாந்த பிஸ்வா சர்மாவிற்கு போலீசார் வழி ஏற்படுத்தி கொடுத்த வீடியோ இணையதளங்களில் வெளியாகி சர்ச்சையானது.
இதையடுத்து முதல்வர் ஹஇமாந்த பிஸ்வா சர்மா மன்னிப்பு கோரினார். இதுபற்றி அவர் தனது எக்ஸ் வலைதள பக்கத்தில், ”அவசர உதவி கிடைக்க வேண்டிய ஒரு நபரின் உயிரை விட முதல்வரின் வாகன பயணம் என்பது முக்கியமானது இகிடையாது. . இதுதொடர்பக அதிகாரிகளிடம் பலமுறை கூறிவிட்டேன். விஐபி பயணம் எந்தவொரு காரணம் கொண்டும் சாதாரண மனிதர் மற்றும் அவசர சேவைகளை பாதிக்க கூடாது என்று கூறிவிட்டேன். தற்போதைய சம்பவம் குறித்து விசாரணைக்கு உத்தவிட்டுள்ளேன். தவறு செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்கவும் கூறியுள்ளேன்” என்றார்.
இந்த பதிவை தொடர்ந்து 4 போலீசார் மீது நடவடிக்கை பாய்ந்தது. ஸ்ரீகோனா போலீஸ் பாயிண்ட் பொறுப்பாளர் பிஜோய் கோஸ்வாமி, நேஷனல் ஹைவே போலீஸ் பாயிண்ட் எஸ்ஐ சிப்சங்கர் தாஸ், எல்என்கே ஜாகுரூல் இஸ்லாம், எல்என்கே காவ்சார் அகமது ஆகியோர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர். இதற்கான உத்தரவை காசர் சீனியர் எஸ்பி பார்த்தா பிரோடிம் தாஸ் பிறப்பித்துள்ளார். அதுமட்டுமின்றி இவர்கள் மீது துறை ரீதியான விசாரணை நடத்தவும் உத்தரவிடப்பட்டுள்ளது.

