Last Updated:
மன உறுதி தளராது 180 பயணிகளின் உயிரைக் காப்பாற்றிய கேப்டன் ஸ்மித் மச்சாரைப் பயணிகள் மற்றும் சமூக வலைதள யூசர்கள் நாயகனாக பாராட்டி வருகின்றனர்
துபாயிலிருந்து இஸ்ரேல் தலைநகர் டெல் அவிவ் நோக்கிச் சென்ற ஃப்ளைதுபாய் நிறுவனத்திற்குச் சொந்தமான விமானத்தில், உதவி விமானி மேற்கொண்ட சதித்திட்டத்தை முறியடித்து, சுமார் 180 பயணிகளின் உயிரைக் காப்பாற்றிய விமானி ஒரு இந்தியர் என்ற தகவல் வெளியாகியுள்ளது. கேப்டன் ஸ்மித் மச்சார் (Captain Smit Machchhar) என்ற அந்த இந்திய விமானி, காயமடைந்த நிலையிலும் துணிச்சலுடன் செயல்பட்டுப் பெரு அசம்பாவிதத்தைத் தடுத்துள்ளார்.
விமானம் நடுவானில் பறந்து கொண்டிருந்தபோது, அதன் உதவி விமானி விமானத்தின் கட்டுப்பாட்டு அமைப்புகளைச் செயலிழக்கச் செய்து சதித்திட்டம் தீட்ட முயன்றதாகக் கூறப்படுகிறது. இதனைத் தடுத்த கேப்டன் ஸ்மித் மச்சாரை, அந்த உதவி விமானி கத்தியால் குத்தியுள்ளார்.
இரத்தக் காயங்களுடன், பேசக் கூட முடியாத அளவுக்குக் கடுமையாகப் பாதிக்கப்பட்ட போதிலும், கேப்டன் ஸ்மித் மச்சார் உதவி விமானியுடன் தீவிரமாகப் போராடி அவரது முயற்சியை முறியடித்தார்.
இந்தத் தாக்குதலால் விமானம் கடத்தப்பட்டுவிட்டதோ என்ற அச்சம் சில நிமிடங்கள் நிலவியது. இருப்பினும், பயங்கரவாதத் தாக்குதல் சாத்தியக்கூறுகள் உடனடியாக மறுக்கப்பட்டன. விமானத்திலிருந்த பிற ஊழியர்கள் மற்றும் விமானிகளின் உதவியோடு சூழல் கட்டுக்குள் கொண்டுவரப்பட்டு, சவுதி அரேபியாவில் உள்ள ஒரு விமான நிலையத்திற்கு விமானம் பாதுகாப்பாகத் திருப்பி விடப்பட்டுத் தரையிறக்கப்பட்டது.
இந்தியக் குடியுரிமை பெற்ற கேப்டன் ஸ்மித் மச்சார், போயிங் 737 ரக விமானங்களை இயக்குவதில் 13 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் கொண்டவர். இவர் கடந்த 4 ஆண்டுகளாக ஐக்கிய அரபு அமீரக அரசின் ‘ஃப்ளைதுபாய்’ விமான நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார்.
அதற்கு முன்பாக, இந்தியாவின் ‘ஸ்பைஸ்ஜெட்’ நிறுவனத்தில் 2011 முதல் சுமார் 10 ஆண்டுகள் பணியாற்றியுள்ளார். இதுவரை 9,750 மணி நேரத்திற்கும் அதிகமாக விமானங்கள் இயக்கிய அனுபவம் கொண்ட இவர், ஒரு பயிற்சி கேப்டனாகவும் பணியாற்றியுள்ளார்.
இரத்த வெள்ளத்திலும் மன உறுதி தளராது 180 பயணிகளின் உயிரைக் காப்பாற்றிய கேப்டன் ஸ்மித் மச்சாரைப் பயணிகள் மற்றும் சமூக வலைதள யூசர்கள் நாயகனாக பாராட்டி வருகின்றனர்.

