Tamilnadu
oi-Vignesh Selvaraj
தாராபுரம்: “எம்ஜிஆர் மாதிரி, ஜெயலலிதா மாதிரி.. இன்னிக்கும் தில்லா இந்த திமுகவை எதிர்ப்பது இந்த விஜய் மட்டும் தான். அது எம்ஜிஆரின் தொண்டர்களுக்கும், மக்களுக்கும் நல்லாவே தெரியும்.” என தாராபுரம் இடைத்தேர்தல் பிரச்சாரத்தில் பேசியுள்ளார் முதல்வர் விஜய்.
மதுராந்தகம், தாராபுரம் சட்டப்பேரவை தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் வரும் அக்டோபர் 6 ஆம் தேதி நடைபெற உள்ளது. தவெக, திமுக, அதிமுக, நாதக, இடதுசாரிகள் என 5 முனை போட்டி நிலவுவதால் இடைத்தேர்தல் களம் சூடுபிடித்துள்ளது. அரசியல் கட்சிகளின் தலைவர்கள் தீவிர பிரச்சாரம் மேற்கொண்டு வருகின்றனர்.

அந்த வகையில், இன்று தாராபுரம் சட்டமன்றத் தொகுதியில், தமிழக முதலமைச்சரும், தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவருமான ஜோசப் விஜய் பரப்புரை மேற்கொண்டுள்ளார். தவெக வேட்பாளர் சத்யபாமாவை ஆதரித்து விஜய் பிரச்சாரம் மேற்கொண்டார்.
முதல்வர் விஜய் பேசுகையில், “தவெக ஆட்சி அமைந்த குறுகிய காலத்திலேயே நாம் கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றி வருகிறோம். ஊழல், லஞ்ச லாவண்யம் அற்ற நிர்வாகத்தை முழுமூச்சோடு உறுதிப்படுத்தி வருகிறோம். முதல் 100 நாட்களில் ரூ. 1 லட்சம் கோடி முதலீடுகள் ஈர்க்கப்பட்டுள்ளன. அக்டோபர் 2 முதல் வெற்றிப் பயணம் திட்டம் செயல்படுத்தப்படும். திருப்பூரில் நவீன வசதிகளுடன் கூடிய நீச்சல் குளம் அமைக்கப்படும்.
2026 தேர்தலில் மக்கள் தவெகவுக்கு வாக்களித்து வெற்றி பெறச் செய்துவிட்டார்கள் என்பதை மறந்துவிட்டு, திமுகவை வீட்டுக்கு அனுப்பிவிட்டார்கள் என்பதை மறந்துவிட்டு, நம் குடும்பம் தான் இன்னும் அதிகாரத்தில் இருக்கிறது என நினைக்கும் மன்னராட்சி மனப்பான்மை எல்லாம் நமக்கு கிடையாது. அண்ணாவையும் மறந்துவிட்டு, தீயசக்தி திமுகவுடன் மறைமுகமாக பினாமியாக கூட்டு சேர்ந்து சுயநலமாக சுத்துறவங்களும் நாம கிடையாது. மக்களுக்கு நன்றிக்கடன் செலுத்தவே அரசியலுக்கு வந்தேன்.
எம்மதமும் சம்மதம் என்பதைவிட எம்மதமும் நம் மதம் என்ற நம்பிக்கையோடு அரசியலுக்கு வந்துள்ளோம். கிருஷ்ண ஜெயந்திக்கும் வாழ்த்து சொல்லுவோம், கிறிஸ்துமஸ்க்கும் வாழ்த்துச் சொல்லுவோம், பக்ரீத்க்கும் வாழ்த்து சொல்லுவோம்.
கொளத்தூர் மக்களுக்கு கோடானு கோடி நன்றி என சிரித்துக்கொண்டே சொல்கிறார் மு.க. ஸ்டாலின். திமுக ஆட்சியின் தவறுக்காகவே கொளத்தூர் மக்கள் வாக்களிக்கவில்லை. இனிமேல் வரப்போகும் எல்லா தேர்தலிலும் மக்கள் நமக்கு ஓட்டு போடவில்லை, கோடானு கோடி நன்றி என சொல்லிக்கொண்டே இருக்க வேண்டியதுதான்.
மக்கள் தீர்ப்புக்கு தலைவணங்குகிறொம் எனச் சொல்வாராம், ஆனால் அதை மதிக்க மாட்டாராம்.. என்னவெல்லாம் சதி வேலை செய்யலாம்.. யார் கூட எல்லாம் கூட்டு சேரக்கூடாதோ அவர்களுடன் எல்லாம் கூட்டு சேர்வது.. அவர்கள் பேசுவதையே இவர்களும் பேசுவார்கள். அவர்கள் தான் மற்றும் பலர். இருவருக்கும் ஒரே ஓனர் தான். நீங்கள் என்ன சதி வேலை செய்தாலும்… கடவுளும் மக்களும் நம்முடன் இருக்கும்போது.. நீங்க ஒண்ணும்..!
நாங்கள் வெளியே வேஷம் போட்டுக்கொண்டு வீட்டுக்குள் பம்மிக்கொண்டிருக்க மாட்டோம். சாதாரண மக்களை தேர்தலில் நிற்க வைத்து, குறுநில மன்னர்களை தவெக தோற்கடிக்கிறது. எம்ஜிஆர் மாதிரி, ஜெயலலிதா மாதிரி.. இன்னிக்கும் தில்லா இந்த திமுகவை எதிர்ப்பது இந்த விஜய் மட்டும் தான். அது எம்ஜிஆரின் தொண்டர்களுக்கும், மக்களுக்கும் நல்லாவே தெரியும்.
இந்த தீயசக்தி திமுகவுக்கு ஓட்டு போடுவீங்களா? எம்ஜிஆருக்கும், ஜெயலலிதாவுக்கும் துரோகம் செய்த இந்த மற்றும் பலருக்கு ஓட்டு போடுவீங்க? திமுக அதிமுக 2 பேரும் ஒண்ணுதான்.. வெளியில் தான் வேஷம்.. 2 பேரும் சொல்லும் பொய்களை எல்லாம் நம்பாதீங்க.. நம் ஆட்சி அமையக்கூடாது என சதி செய்த அவர்களுக்கு நாம் பாடம் புகட்டியே ஆகவேண்டும். நமது சின்னம் விசில்.
அன்று நடந்தது அம்மா ஆட்சி, அடுத்து நடந்தது அப்பா ஆட்சி, இப்போது நடப்பது பிள்ளைகளின் ஆட்சி.. நம் வீட்டு பிள்ளைகளின் ஆட்சி. இதுதான் உண்மையான மக்களாட்சி.. வெற்றி நிச்சயம். கான்ஃபிடண்ட்டா இருங்க மக்களே..” என உரையாற்றியுள்ளார் முதலமைச்சர் விஜய்.

