நாட்டின் சட்டத்தின் ஆட்சியை நிலைநிறுத்துவதற்கும், அரசியல் குற்றங்கள் தொடர்பான குற்றச்சாட்டுகளை நாட்டின் நீதித்துறை ஊடாக விசாரணைக்கு உட்படுத்துவதற்கும் அரசாங்கம் முழுமையான அர்ப்பணிப்புடன் செயற்பட்டு வருவதாகப் பிரதி அமைச்சர் எரங்க குணசேகர தெரிவித்துள்ளார்.
பொலிஸார் மற்றும் நீதித்துறை உள்ளிட்ட நாட்டின் சட்ட, விசாரணை நிறுவனங்களின் சுதந்திரத்தை வலுப்படுத்த அரசாங்கம் தீவிரமாக நடவடிக்கை எடுத்து வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
அரசியல் குற்றங்கள், படுகொலைகள் அல்லது நாட்டின் பொருளாதார வீழ்ச்சிக்குக் காரணமான செயல்களில் தொடர்புடைய எவராயினும், அவர்கள் நாட்டை விட்டு வெளியேறியிருந்தாலும் சட்டத்தின் முன் நிறுத்தப்பட்டு உரிய தண்டனையை அனுபவிப்பார்கள் என எரங்க குணசேகர எச்சரித்துள்ளார். தாக்கல் செய்யப்படும் வழக்குகளின் எண்ணிக்கையும் தன்மையும் இழைக்கப்பட்ட குற்றங்கள் மற்றும் விசாரணைகளின் முடிவுகளைப் பொறுத்தே அமையும் என்றார்.
முன்னாள் முதல் குடிமகள் சிரந்தி ராஜபக்ச குறித்த கேள்விக்குப் பதிலளித்த அவர், நீதிமன்ற உத்தரவுக்கமைய அவர் உத்தியோகபூர்வ வாக்குமூலம் ஒன்றை வழங்க வேண்டியுள்ளதாகத் தெரிவித்தார். மேலும், அவர் மருத்துவச் சிகிச்சைக்காக வெளிநாடு சென்றுள்ளதாகச் சமூக ஊடகங்களில் வெளியாகும் தகவிகள் குறித்தும் அவர் சுட்டிக்காட்டினார்.
சிரந்தி ராஜபக்ச உடனடியாக நாட்டுக்குத் திரும்பிச் சட்ட நடவடிக்கைகளுக்கு முழுமையாக ஒத்துழைப்பு வழங்குவது அவசியமென்றும், அவ்வாறு தவறும்பட்சத்தில் உரிய அதிகாரிகளினால் மேலதிக நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றும் அவர் எச்சரித்துள்ளார்.
சி.டி. ஸ்கேன் (CT Scan) இயந்திரம் தொடர்பில் நடந்துவரும் வழக்கு ஒன்றில் எழுந்துள்ள குற்றச்சாட்டுகள் குறித்தும் குறிப்பிட்ட அவர், சீனா மற்றும் வங்கியொன்றிடமிருந்து பெறப்பட்ட நிதியைக் கொண்டு கொள்முதல் செய்யப்பட்ட இயந்திரம் முன்னாள் ஜனாதிபதியின் மகனுக்குப் பிறந்தநாள் பரிசாக வழங்கப்பட்டதாகக் கூறப்படும் சம்பவம் குறித்து நீதித்துறை மூலமாகவே உண்மைகள் வெளிவரும் எனவும் தெரிவித்தார்.

