Last Updated:
SIR மூலம் நீக்கப்பட்ட 13 கோடி வாக்காளர்களை மீண்டும் சேர்க்க வேண்டும் என காங்கிரஸ் செயற்குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
SIR நடவடிக்கைகளில் தங்களின் ஒப்புதல் இல்லாமல், தலைமைத் தேர்தல் ஆணையர் சில முடிவுகளை தன்னிச்சையாக எடுத்ததாக 2 தேர்தல் ஆணையர்களும் குற்றம்சாட்டினர். இதற்கு எதிர்க்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்த நிலையில், அது குறித்து ஆலோசிக்க டெல்லியில் அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் செயற்குழு கூடியது. இதில், காங்கிரஸ் மூத்த தலைவர்களான சோனியா காந்தி, ராகுல் காந்தி, மல்லிகார்ஜுன கார்கே, பிரியங்கா காந்தி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ்குமார் உடனடியாக தனது பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் எனவும், வாக்காளர் பட்டியலில் சிறப்பு தீவிர திருத்த நடவடிக்கை மூலம் நீக்கப்பட்ட 13 கோடியே 30 லட்சம் வாக்காளர்களை மீண்டும் பட்டியலில் சேர்க்க வேண்டும் எனவும் வலியுறுத்தி இந்த கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. மேலும், தற்போது நடைபெற்று வரும் SIR பணிகளை உடனடியாக நிறுத்த வேண்டும் எனவும் வலியுறுத்தப்பட்டது.
தேர்தல் ஆணையத்தைப் பயன்படுத்தி பாஜக முறைகேடு செய்வதாக குற்றம்சாட்டிய காங்கிரஸ், அதற்கு எதிராக நாடு முழுவதும் போராட்டத்தை தீவிரப்படுத்த தீர்மானம் நிறைவேற்றியுள்ளது. இந்நிலையில், தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமாரை பணியிடை நீக்கம் செய்யக் கோரிய வழக்கை உச்சநீதிமன்றம் விசாரணைக்கு ஏற்றுள்ளது. இந்த வழக்கு அடுத்த வாரம் விசாரணைக்கு பட்டியலிடப்படும் என தலைமை நீதிபதி ஒப்புதல் அளித்துள்ளார்.


