International
oi-Hema Vandhana
நியூயார்க்: அமெரிக்காவில் உள்ள ஒரு விலங்கு காப்பகத்தில், சுமார் 113 கிலோ எடையுள்ள ராட்சத முதலை ஒன்றை பெண் பராமரிப்பாளர் ஒருவர் தன்னுடைய தோளில் தூக்கி போட்டு கொண்டார்.. பச்சிளம் குழந்தையை தோளில் தூக்கி கொஞ்சுவது போல, அந்த முதலையை தோளில் சுமந்து நிற்கிறார் அந்த பெண்.. இந்த வீடியோதான் சோஷியல் மீடியாவில் பரவி அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.
அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் உள்ளது “தி ரெப்டைல் ஜூ” என்ற பெயரில் பிரபலமான விலங்கு காப்பகம் ஒன்று செயல்பட்டு வருகிறது..

ஜூலியட் ப்ரூவர் யார் தெரியுமா
அந்த இடத்தில் ஜூலியட் ப்ரூவர் என்ற பெண் பராமரிப்பாளராக வேலை பார்த்து வருகிறார். இங்கு “டார்த்” என்ற ராட்சத முதலையை இவர்தான் பராமரிக்கிறார்.. அந்த முதலை குட்டியாக இருந்தபோதிலிருந்தே கண்ணும் கருத்துமாகப் பாதுகாத்து ஊட்டி வளர்த்தவரும் ஜூலியட்தான்.
முதலில் குழந்தையை தூக்குவது போல அசால்ட்டாக தூக்குகிறார்.. ஒரு கட்டத்தில் அதை அணைத்துக்கொள்கிறார். பிறகு தோளில் தூக்கிப் போட்டுக்கொண்டு செல்கிறார்.
தோளில் 113 கிலோ முதலை
பொதுவாக முதலைகள் என்றாலே மனிதர்களைக் கண்டால் பாய்ந்து சென்று தாக்கக் கூடிய கொடூரமான விலங்குகள் ஆகும். ஆனால், இந்த முதலையோ கடந்த பல வருடங்களாக ஜூலியட்டுடன் பழகி வருவதால், ஒரு நல்ல தோழனைப் போல பழக தொடங்கியுள்ளது.. யார் பக்கத்தில் சென்றாலும் வாயைப் பிளந்து மிரட்டிவிடுமாம் டார்த்..
அப்படிப்பட்ட பயங்கரமான முதலையை, ஜூலியட் மட்டும் கொஞ்சமும் சற்றும் பயமில்லாமல் தனது தோளிலும் கைகளிலும் ஒரு பச்சிளிக் குழந்தையைப் போல மிக சாதாரணமாகத் தூக்கிச் செல்கிறார். அந்த முதலை சுமார் 250 பவுண்டு அதாவது 113 கிலோ எடை உள்ளது.
அவர் தோளில் உட்காரும்போது அந்த முதலையும் எந்தவித கோபமும் காட்டுவதில்லை.. சண்டை போடத் தெரியாத ஒரு அமைதியான செல்ல பிராணியை போல மிகவும் சாந்தமாக படுத்து கொள்கிறது.. மனிதனுக்கும் கொடூரமான வனவிலங்குக்கும் இடையில் இவ்வளவு பெரிய பாசமும் நம்பிக்கையும் இருக்க முடியுமா என்று இதை பார்ப்போர், மிரண்டு போய் விடுகிறார்கள்.
வைரலாகும் வீடியோ
இதை வீடியோவில் பார்த்து சிலர் முதலை என்கிறார்கள்.. ஆனால் ஒருசிலர் அலிகேட்டர் என்கிறார்கள்.. எனினும், விலங்குகளின் மீது மனிதர்கள் காட்டும் இந்த அன்பும், பராமரிப்பாளர்களின் அசாத்திய துணிச்சலும்தான் சோஷியல் மீடியாவில் பலரால் பாராட்டப்பட்டு வருகிறது.
இந்த பல்வேறு வகையான ஊர்வன உயிரினங்கள் பராமரிக்கப்பட்டு வருகின்றன. பாம்புகள், அலிகேட்டர்கள் உள்ளிட்ட உயிரினங்களை அங்குள்ள ஊழியர்களும் நெருக்கமாக கையாள்கிறார்கள்.. இதுதொடர்பான வீடியோக்களும் அங்கிருந்து வெளியாகி வருகின்றன.
அதேசமயம், வனவிலங்குகள் எவ்வளவுதான் நம்முடன் பழகியிருந்தாலும் அவை எப்போது வேண்டுமானாலும் மாறக்கூடும் என்பதால், பொதுமக்கள் யாரும் இதுபோன்று ஆபத்தான முறைகளில் முயற்சி செய்ய வேண்டாம் என்றும், விலங்குகளிடம் எப்போதும் எச்சரிக்கையுடனும் கவனத்துடனும் இருக்க வேண்டும் என்றும் நிபுணர்கள் தொடர்ந்து அறிவுறுத்தி வருகிறார்கள்.. எனினும் ஜூலியட்டின், தோள் மீது முதலை உட்கார்ந்திருப்பதுதான், பலரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது.



