கோலாலம்பூர்:
பெட்டாலிங் பகுதியிலுள்ள குடியிருப்பு ஒன்றில் 18 வயது இளம்பெண் ஒருவரை மின் சிகரெட் (Vape) புகைக்கக் கட்டாயப்படுத்தி, அவர் மயக்கமடைந்ததைத் தொடர்ந்து பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதாகக் காவல் துறையில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
கடந்த சனிக்கிழமை அதிகாலை 5 மணியளவில் இச்சம்பவம் நடந்துள்ளதாகப் பிரிக்பீல்ட்ஸ் மாவட்டக் காவல் துறைத் தலைவர் உதவி ஆணையர் ஹூ சாங் ஹுக் உறுதிப்படுத்தியுள்ளார்.
“பாதிக்கப்பட்ட பெண், சந்தேகநபர் தன்னை வலுக்கட்டாயமாக வேப் (Vape) புகைக்க வைத்ததால் சுயநினைவை இழந்ததாகத் தெரிவித்துள்ளார். காலை 7 மணியளவில் சுயநினைவு திரும்பியபோது, ஆடை களையப்பட்ட நிலையிலும், உடல் உறுப்புகளில் கடுமையான வலியையும் உணர்ந்ததால் தான் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டிருப்பதை அறிந்து காவல் துறையில் புகாரளித்துள்ளார்.”என்று அவர் சொன்னார்.
இச்சம்பவம் தொடர்பாகக் குற்றவியல் சட்டத்தின் பிரிவு 376-இன் (பாலியல் வன்கொடுமை) கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுத் தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
இக்கொடூரச் செயலில் ஈடுபட்டுத் தலைமறைவாக உள்ள சந்தேகநபரை அடையாளம் கண்டு கைது செய்யக் காவல் துறையினர் தீவிர தேடுதல் வேட்டையை முடுக்கிவிட்டுள்ளனர்.



