மகாபரணியில் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்தால் அவர்கள் இறை நிலையாகிற முக்தியை பெறுவார்கள் என்பது ஐதீகம். மாதந்தோறும் பரணி நட்சத்திரம் வந்தாலும், கார்த்திகை மற்றும் புரட்டாசி மாதங்களில் வரும் பரணி நட்சத்திரத்தை மட்டும் தான் மகாபரணி என சிறப்பித்து சொல்லுவதுண்டு. ஒருவர் தன்னுடைய வாழ்நாளில் எந்த புனித தலத்திற்கும் சென்று வழிபட்டதோ, புனித நீராடியதோ அல்லது வழிபட்டதோ கிடையாது என்றாலும் அவர் இறந்த பிறகு அவருக்கு மகாபரணியில் திதி கொடுத்தால் அவர் தன்னுடைய வாழ்நாளில் செய்த அனைத்து பாவங்களும் நீங்கி விடும் என்பது ஐதீகம்.
மகாாபரணியில் முன்னோர்களுக்கு திதி கொடுப்பதால் அவர்களின் ஆத்மா நிச்சயம் சாந்தி அடையும். மகாபரணியில் முன்னோர்களுக்க திதி கொடுத்தால், திதி கொடுப்பவர்களின் கெட்ட கர்மாக்கள் அழிந்து, நல்ல கர்மா அதிகரிக்கும். இதனால் தற்போதைய வாழ்க்கையும், எதிர்காலமும் சிறப்பாக அமையும் என்பது நம்பிக்கை.
பரணி சிரார்த்தத்தின் சிறப்புகள் பற்றி மட்ச புராணம், அக்னி புராணம், கருட புராணம் போன்றவற்றில் சிறப்பித்து கூறப்பட்டுள்ளது. மகாளய பட்சத்தில் வரும் பரணி நட்சத்திரத்தில் இறந்தவர்களுக்கு திதி கொடுப்பது என்பது கயாவில் சென்று திதி கொடுத்ததற்கு சமமான புண்ணிய பலனாக கருதப்படுவதாக சொல்லப்படுகிறது.
மகாளய பட்சத்தில் வரும் பரணி நட்சத்திரம் மட்டுமின்றி, பரணி நட்சத்திரத்துடன் இணைந்து வரும் சதுர்த்தி அல்லது பஞ்சமிகளும் முன்னோர்களுக்கு சிரார்த்த சடங்குகள் செய்வது மிகவும் முக்கியமானதாகவும், இது மகாளய அமாவாசை அன்று திதி கொடுத்ததற்கு இணையாக சொல்லப்படுகிறது.இத்தகைய சிறப்புமிக்க மகாபரணி, இந்த ஆண்டு செப்டம்பர் 29ம் தேதியான இன்று அமைந்துள்ளது.
இது சதுர்த்தியுடன் இணைந்து வரும் மகாபரணி என்பதால் இதற்கு சிறப்பு அதிகம். இன்று காலை 11.25 மணிக்கு துவங்கி, செப்டம்பர் 30 காலை 10.18 வரை பரணி நட்சத்திரம் உள்ளது. இந்த நாளில் வீட்டில் செய்யும் ஒரு எளிய வழிபாடு, நம்முடைய முன்னோர்கள் மட்டுமல்ல நமக்கு பின்னால் வரும் தலைமுறைக்கும் அவர்களின் மரணத்திற்கு பிறகு யமலோகத்தில் ஏற்படும் துன்பங்கள் ஏற்படாது என்பது நம்பிக்கை.
மகாபரணியில் என்ன செய்ய வேண்டும்?
மகாபரணி, யமதர்ம ராஜனை வழிபடுவதற்கு உரிய நாளாகும். இந்த நாளில் மாலையில் தனியாக எமதர்ம ராஜாவை நினைத்து, விளக்கு ஏற்ற வேண்டும். பிறகு யமதர்மனிடம், ” என்னுடைய முன்னோர்களுக்கு எமலோகத்தில் எந்த துன்பமும் ஏற்படாமல் அவர்களுக்கு நற்கதியை அருள வேண்டும். பித்ருலோகத்தில் அவர்கள் சுகமாக வாழ வேண்டும். என்னுடைய முன்னோர்களுக்கு மட்டுமின்றி, எனக்கு பிறகு வரும் தலைமுறையினரும் தங்களின் மரணத்திற்கு பிறகு யமலோக துன்பங்களில் கஷ்டப்படாமல் காக்க வேண்டும்” என மனதார வேண்டிக் கொள்ள வேண்டும். முன்னோர்களின் ஆத்மா சாந்தி அடைய வேண்டும் என வேண்டிக் கொண்டு, தான தர்மங்கள் செய்ய வேண்டும்.



