
ஈரானுக்கு எதிரான மோதலில் அமெரிக்கா வெற்றி பெற்று, ஈரான் சரணடையும் போது உலகளவில் கச்சா எண்ணெய் விலை கடுமையாக வீழ்ச்சியடையும் என டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார்.
ஈரானுக்கு எதிரான இராணுவ மற்றும் பொருளாதார மோதலில் அமெரிக்கா வெற்றி பெறும் என்றும், ஈரான் சரணடைந்தவுடன் உலகளாவிய கச்சா எண்ணெய் விலை அதலபாதாளத்துக்கு சரியும் என்றும் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார்.
ஈரான் சரணடையும் தருணத்தில் இரு நாடுகளுக்கு இடையேயான போர் விரைவில் முடிவுக்கு வரும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
அமெரிக்காவில் தனது நிர்வாகத்தின் கீழ் விலைவாசி மற்றும் எரிபொருள் செலவுகள் குறைந்துள்ளதாகவும், நாட்டின் வரலாற்றில் முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு வறுமை மிகக் குறைந்த நிலையை எட்டியுள்ளதாகவும் டிரம்ப் கூறியுள்ளார்.
ஈரான் விவகாரம் முழுமையாகத் தீர்ந்தவுடன், பெட்ரோல் மற்றும் டீசல் விலைகள் மட்டுமின்றி, பலசரக்குப் பொருட்களின் விலைகளும் கணிசமாகக் குறையும் என்றும் அவர் நம்பிக்கை தெரிவித்தார்.
தற்போதைய போர்ச் சூழலுக்கு மத்தியிலும், கடந்த வார இறுதியில் ஹோர்முஸ் நீரிணைப் பகுதியில் இருந்து போருக்கு முன்னைய அளவை விட அதிகமாக, சாதனை அளவிலான கச்சா எண்ணெய் வெளியே கொண்டு வரப்பட்டதாக அவர் தெரிவித்தார்.
இதனிடையே, ஹோர்முஸ் நீரிணையை முழுமையாகத் திறப்பதற்காக ஈரான் முன்வைத்த அமைதி ஒப்பந்தம் அமெரிக்காவின் நிபந்தனைகளுக்கு உட்படாததால் அதனை நிராகரித்துள்ளதாக டிரம்ப் உறுதிப்படுத்தினார். இருப்பினும் மறைமுகப் பேச்சுவார்த்தைகள் தொடர்ந்து நடைபெறும் என்று அவர் தெளிவுபடுத்தினார்.
அமெரிக்காவில் நவம்பர் மாதம் நடைபெறவுள்ள இடைக்காலத் தேர்தலுக்கு முன்னதாக, ஈரான் மீது கூடுதல் இராணுவத் தாக்குதல்கள் நடத்தப்படுவதற்கான வாய்ப்புகள் இன்னும் நீடிப்பதாக அமெரிக்க ஜனாதிபதி சூசகமாகத் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, போருக்கும் தயார், பேச்சுவார்த்தைக்கும் தயார் என ஈரான் தரப்பு தெரிவித்துள்ளது.

