தம்பின்:
செமன்சே பகுதியில் இன்று காலை இரண்டு கார்கள் நேருக்கு நேர் மோதிக்கொண்ட கொடூர வீதி விபத்தில் கணவன்-மனைவி ஆகிய இருவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். அவர்களது 4 வயது மகன் படுகாயமடைந்து உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளான்.
இன்று காலை 10.55 மணியளவில் செமன்சேயிலிருந்து புக்கிட் ரோக்கான் நோக்கிச் சென்று கொண்டிருந்த புரோட்டான் வீரா கார், எதிர் திசையில் வந்த பெரோடுவா பெஸா காரின் மீது மோதி இவ்விபத்து நிகழ்ந்தது.
“புரோட்டான் வீரா காரை ஓட்டிச் சென்ற நபர் வாகனத்தின் கட்டுப்பாட்டை இழந்து எதிர் திசைப் பாதைக்கு மாறியதால், அங்கு வந்த பெரோடுவா பெஸா கார் மீது பலமாக மோதியுள்ளது முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளதாக” தம்பின் மாவட்டக் காவல் துறைத் தலைவர், சூப்ரெண்டன்ட் அமிருதீன் சரிமான் தெரிவித்தார்.
புரோட்டான் வீரா காரின் பின் இருக்கையில் அமர்ந்திருந்த 4 வயது சிறுவன் படுகாயமடைந்து தீவிரமான நிலையில் சிரம்பான், துவாங்கு ஜாஃபார் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டுத் தீவிர சிகிச்சை பெற்று வருகிறார்.



