Last Updated:
பி.டி. உஷாவின் சாதனையை முறியடித்துப் பதக்கம் வென்றுள்ள தமிழ்நாட்டைச் சேர்ந்த வித்யா ராம்ராஜுக்கு விளையாட்டு உலகினர் பாராட்டுக்களைத் தெரிவித்து வருகின்றனர்.
ஜப்பானின் ஐச்சி-நகோயாவில் நடைபெற்று வரும் 2026 ஆசிய விளையாட்டுப் போட்டியில், தமிழ்நாட்டை சேர்ந்த வீராங்கனை வித்யா ராம்ராஜ் (Vithya Ramraj) மகளிருக்கான 400 மீட்டர் தடை ஓட்டத்தில் (400m Hurdles) வெண்கலப் பதக்கம் வென்று வரலாற்றுச் சாதனை படைத்துள்ளார்.
இன்று நடைபெற்ற விறுவிறுப்பான 400 மீட்டர் தடை ஓட்ட இறுதிப் போட்டியில், வித்யா ராம்ராஜ் இலக்கை 54.75 வினாடிகளில் கடந்து தனது சிறந்த தனிப்பட்ட டைமிங்கை பதிவு செய்தார். இதன்படி, 1984-ஆம் ஆண்டு லாஸ் ஏஞ்சலஸ் ஒலிம்பிக் போட்டியில் இந்திய தடகளப் புயல் பி.டி. உஷா (P.T. Usha) ஏற்படுத்திய 55.42 வினாடிகள் என்ற 42 ஆண்டு கால தேசியச் சாதனையை வித்யா முறியடித்துள்ளார்.
முன்னதாக 2023-ஆம் ஆண்டில் பி.டி. உஷாவின் சாதனையை வித்யா சமன் செய்திருந்த நிலையில், தற்போது அதை முழுமையாக முறியடித்து இந்திய தடகள வரலாற்றில் முதலிடத்தைப் பிடித்துள்ளார். இந்திய தடகளக் கூட்டமைப்பு (AFI) இச்சாதனையை உறுதி செய்து பாராட்டு தெரிவித்துள்ளது. இந்த போட்டியில் ஐக்கிய அரபு அமீரகத்தைச் (UAE) சேர்ந்த மரியம் கரீம் 54.31 வினாடிகளில் இலக்கை அடைந்து ஆசிய விளையாட்டுப் போட்டி சாதனையுடன் தங்கப் பதக்கத்தைக் கைப்பற்றினார். கஜகஸ்தானின் அதெலினா செம்ஸ் 54.58 வினாடிகளில் கடந்து வெள்ளிப் பதக்கம் வென்றார்.
இந்தியா தற்போது பதக்கப் பட்டியலில் 12-வது இடத்தில் உள்ளது. 42 ஆண்டுகளுக்குப் பிறகு பி.டி. உஷாவின் சாதனையை முறியடித்துப் பதக்கம் வென்றுள்ள தமிழ்நாட்டைச் சேர்ந்த வித்யா ராம்ராஜுக்கு விளையாட்டு உலகினர் பாராட்டுக்களைத் தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில், தடகள வீராங்கனை வித்யா ராம்ராஜிக்கு தமிழ்நாடு அரசு சார்பில் ரூ.30 லட்சம் ஊக்கத்தொகை வழங்கப்படும் என முதலமைச்சர் விஜய் அறிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், “ஜப்பானில் நடைபெற்றுவரும் ஆசிய விளையாட்டுப் போட்டியில், பெண்கள் 400 மீட்டர் தடை ஓட்டப் பிரிவில் வெண்கலப் பதக்கம் வென்று தமிழ்நாட்டிற்கும், இந்தியாவிற்கும் பெருமை சேர்த்துள்ள தடகள வீராங்கனை வித்யா ராம்ராஜிக்கு எனது மனமார்ந்த பாராட்டுகளையும், நல்வாழ்த்துகளையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
ஜப்பானில் நடைபெற்றுவரும் ஆசிய விளையாட்டுப் போட்டியில், பெண்கள் 400 மீட்டர் தடை ஓட்டப் பிரிவில் வெண்கலப் பதக்கம் வென்று தமிழ்நாட்டிற்கும், இந்தியாவிற்கும் பெருமை சேர்த்துள்ள தடகள வீராங்கனை வித்யா ராம்ராஜ் அவர்களுக்கு எனது மனமார்ந்த பாராட்டுகளையும், நல்வாழ்த்துகளையும் தெரிவித்துக்… pic.twitter.com/2SKLnc9H1Z
— CMOTamilNadu (@CMOTamilnadu) September 28, 2026
இந்தியாவின் புகழ்பெற்ற தடகள வீராங்கனை பி.டி. உஷா 1984-ஆம் ஆண்டு படைத்த தேசிய சாதனையை 42 ஆண்டுகளுக்குப் பின்னர் வீராங்கனை வித்யா ராம்ராஜ் முறியடித்து, தற்போது புதிய தேசிய சாதனையைப் படைத்திருப்பது மேலும் சிறப்புக்குரியதாகும். அவரது சிறப்பான சாதனையைப் பாராட்டும் வகையில், தமிழ்நாடு அரசு சார்பில் ரூ.30 லட்சம் உயரிய ஊக்கத்தொகை வழங்கப்படும். அவரது வெற்றி, தமிழ்நாட்டின் இளைஞர்களுக்கும், மகளிருக்கும் புதிய உத்வேகத்தையும், நம்பிக்கையையும் அளிக்கும். தடகள வீராங்கனை வித்யா ராம்ராஜ் தொடர்ந்து பல சாதனைகளைப் படைத்திட வாழ்த்துகிறேன்!.” என்று அந்த பதிவில் தெரிவித்துள்ளார்.


