Last Updated:
கேரள அரசின் gad.kerala.gov.in இணையதளம் பாகிஸ்தான் ஹேக்கர்களால் ஹேக் செய்யப்பட்டது.
கேரள மாநில பொது நிர்வாகத் துறையின் (General Administration Department – GAD) அதிகாரப்பூர்வ இணையதளமான gad.kerala.gov.in ஞாயிற்றுக்கிழமை (2026 செப்டம்பர் 27) காலை சைபர் தாக்குதலுக்கு உள்ளாகி ஹேக் செய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில், ஹேக் செய்யப்பட்ட இணையதளத்தின் முகப்புப் பக்கத்தில் (Homepage) கேரள அரசுத் தகவல்களுக்குப் பதிலாக, பாகிஸ்தான் தேசியக் கொடி பதிவேற்றப்பட்டிருந்தது. மேலும், ‘பாகிஸ்தான் ஜிந்தாபாத்’ (Pakistan Zindabad) மற்றும் ‘நாங்கள் பாகிஸ்தான் ஹேக்கர்கள்’ (We Are Pakistani Hackers) போன்ற வாசகங்களும் இடம்பெற்றிருந்தன.
மேலும் பாகிஸ்தானைச் சேர்ந்த ‘டீம் பிளாக்லீட்ஸ்’ (Team Blackleets) என்ற ஹேக்கிங் குழு இந்தத் தாக்குதலுக்குப் பொறுப்பேற்றுள்ளது. “ஒவ்வொரு நாளும் பல இணையதளங்கள் ஹேக் செய்யப்படுகின்றன. இன்று உங்களுக்கான நாள்” என்ற மிரட்டல் செய்தியையும் அவர்கள் பக்கத்தில் பதிவிட்டிருந்தனர்.
இணையதளம் ஹேக் செய்யப்பட்டதை அறிந்தவுடன், ஹோஸ்டிங் சேவை வழங்கும் நிறுவனம் அந்த கணக்கை தற்காலிகமாக முடக்கியது. ஹேக்கர்கள் முகப்புப் பக்கத்தை மட்டும் மாற்றினார்களா அல்லது சர்வர் மற்றும் தரவுத்தளங்களுக்குள் நுழைந்து ஏதேனும் முக்கியமான அரசுத் தரவுகளைத் திருடியுள்ளனரா (Data Breach) என்பது குறித்து சைபர் பாதுகாப்பு குழுவினர் தீவிரமாக ஆய்வு செய்து வருகின்றனர்.


