ராசியான அமெரிக்கா, சீனா.. வரி விதிப்பில் பின்வாங்கிய டிரம்ப்.. ஜி ஜின்பிங் போட்ட கிடுக்குபிடி!
உலகளவில் பெரும் பொருளாதார நாடாக இருக்கும் அமெரிக்கா – சீனா மத்தியிலான வர்த்தக போர் பல வருடங்களாக இருந்து வந்தாலும், டிரம்ப் ஆட்சிக்கு வந்த பின்பு விஸ்வரூபம் எடுத்தது என்று தான் சொல்ல வேண்டும். இந்த நிலையில் SCO, BRICS, ஐநா பொதுக்கூட்டம் முடிந்த பின்பு சீனா அதிபர் ஜி ஜின்பிங் வாஷிங்டன்-க்கு சென்று அமெரிக்க அதிபர் டிரம்ப் உடன் 3 நாள் பேச்சுவார்த்தை நடத்தினார்.
இந்த பேச்சுவார்த்தையில் நடக்கும் நேரம் மிகவும் முக்கியமானது, சமீபத்தில் ரஷ்யாவிடம் கச்சா எண்ணெய் வாங்கும் இந்தியா, சீனாவைக் குறிவைத்து 100 சதவீதம் வரி விதிக்கும் மசோதா அமெரிக்கா நாடாளுமன்றத்தில் ஒப்புதல் பெற்று டிரம்ப் கையெழுத்தாகி எப்போது வேண்டுமானாலும் நடைமுறைக்கு வரும் நேரத்தில் ஜி ஜின்பிங் – டிரம்ப் மத்தியிலான சந்திப்பு நடந்துள்ளது.

சீனா அரசு ஜி ஜின்பிங்-ன் 3 நாள் அமெரிக்கப் பயணம் குறித்து வெளியிட்டுள்ள அதிகாரப்பூர்வ அறிக்கையில், இரு நாடுகளும் 30 பில்லியன் டாலர் மதிப்பிலான பொருட்கள் மீதான வரியைக் குறைக்க ஒப்புக்கொண்டு உள்ளது.
இதேவேளையில் சீனாவும், அமெரிக்காவும் செயற்கை நுண்ணறிவு துறையில் இணைந்து செயல்பட புதிய பேச்சுவார்த்தை நடத்துவதற்குத் தயாராகி வருவதாகத் தெரிவித்துள்ளது. பல வருடங்களாக நீடித்து வரும் வர்த்தக போர் அச்சத்திற்கு மத்தியில் 8 முக்கிய திட்டங்கள் அடிப்படையிலான நடந்த பேச்சுவார்த்தையில் இரு நாட்டுத் தலைவர்கள் மத்தியிலும் முடிவுகள் எட்டப்பட்டு உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
இதேவேளையில் இரு நாடுகளும் விதித்துள்ள வரிகளை நடைமுறைக்குக் கொண்டு வர அறிவிக்கப்பட்ட 2 மாதம் கால அவசாகம் நவம்பர் 10 வரையில் இருக்கும் நிலையில், அதற்குள் தீர்வுகள் எட்டப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இரு நாடுகள் மத்தியிலான வர்த்தக வித்தியாசங்கள் மற்றும் வரி விதிப்பு ஆகியவற்றைக் குறித்த பேச்சுவார்த்தை விரைவில் துவங்கப்படும் என அமெரிக்க கருவூல செயலாளர் ஸ்காட் பெசன்ட் தெரிவித்தார்.
மேலும் இந்த 3 நாள் சந்திப்பில் பேச்சுவார்த்தை மற்றும் ஆலோசனைக்கான சூழ்நிலை மட்டுமே உருவாக்கப்பட்ட நிலையில் எவ்விதமான இறுதி ஒப்பந்தமும் எட்டப்படவில்லை எனவும் விளக்கம் கொடுக்கப்பட்டு உள்ளது.
டிரம்ப் தலைமையிலான அரசு அமெரிக்கா உடன் வர்த்தக உபரி கொண்ட நாடுகள் மீதி கடுமையான ரெசிப்ரோக்கல் வரி விதித்த போது எதிர் வரி விதித்த ஒரு சில நாடுகளில் சீனா முக்கியமானது.
சீனா அமெரிக்காவுக்கு இணையாக அனைத்து பொருட்கள் மீதும் வரி விதித்தது மட்டும் அல்லாமல் முக்கியமாக அரிய உலோக காந்தங்கள் மீதான ஏற்றுமதி தடையை விதித்தது.
மேலும் அரிய உலோகம், உதிரிப் பாகங்கள் என பலவற்றைக் கடுமையான வர்த்தக கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தது. இதற்கிடையில் சீனா தொடர்ந்து அமெரிக்கப் பத்திரங்களை விற்பனை செய்து வருவதும் அமெரிக்க நிதி நிலைக்கு பெரும் சுமையாக மாறி வருகிறது.
