
சட்டவிரோதமான முறையில் கறுப்புப் பவளப்பாறைகளை தம்வசம் வைத்திருந்த குற்றச்சாட்டில் கல்கிசை மற்றும் இரத்மலானை பகுதிகளில் வைத்து இரு சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். விமானப்படை புலனாய்வுப் பிரிவினரும் வனஜீவராசிகள் திணைக்களமும் இணைந்து இந்த சுற்றிவளைப்பை முன்னெடுத்துள்ளன.
சட்டவிரோதமான முறையில் கறுப்புப் பவளப்பாறைகளைத் தம்வசம் வைத்திருந்த குற்றச்சாட்டில் இரண்டு சந்தேகநபர்கள், இன்று வெள்ளிக்கிழமை (25) கல்கிசை மற்றும் இரத்மலானை பகுதிகளில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர்.
இரத்மலானை மெலிபன் சந்தியிலும், கல்கிசை “நிசல செவன” மயானத்துக்கு அருகிலும் முன்னெடுக்கப்பட்ட சுற்றிவளைப்புகளின் போதே, இவர்கள் இருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
விமானப்படை புலனாய்வுப் பிரிவினரும் பெல்லன்விலவில் அமைந்துள்ள கொழும்பு மாவட்ட வனவிலங்கு வலய அலுவலக அதிகாரிகளும் இணைந்து முன்னெடுத்த விசேட சுற்றிவளைப்பின் போதே, இந்த கைது நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் மற்றும் பறிமுதல் செய்யப்பட்ட பொருட்கள் தொடர்பான மேலதிக விசாரணைகளை பெல்லன்வில கொழும்பு மாவட்ட வனவிலங்கு வலய அலுவலக அதிகாரிகள் முன்னெடுத்து வருகின்றனர்.
அத்துடன், இந்த சுற்றிவளைப்பு தொடர்பான விடயங்களை கல்கிசை நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக வனஜீவராசிகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.

