தேவர்களும் அசுரர்களும் அமிர்தத்தைப் பெறுவதற்காகப் பாற்கடலைக் கடைந்தனர். மந்திர மலையை மத்தாகவும், வாசுகியை கயிறாகவும் கொண்டு கடைந்த போது, முதலில் வெளிப்பட்டது ஆலகால விஷம். அந்த விஷம் உலகையே அழிக்கும் அளவுக்கு கொடியதாக இருந்ததாக கூறப்படுகிறது. அதனால் அஞ்சிய தேவர்கள் கைலாயம் சென்று சிவபெருமானிடம் முறையிட்டனர்.
உலக உயிர்களின் துயரைப் போக்குவதற்காக சிவபெருமான் அந்த விஷத்தை ஏற்றுக் கொண்டு, நீலகண்டராக காட்சி அளித்தார். சிவபெருமான் அருந்திய ஆலகால விஷம் அவரை தாக்காமல் இருக்க, அதை அவரது கழுத்திலேயே அன்னை பார்வதி நிறுத்தியதாக புராணங்கள் சொல்கின்றன.
ஏகாதசி நாளில் ஆலகால விஷத்தை சிவபெருமான் ஏற்றுக் கொண்டதாகவும், துவாதசி நாளில் அவர் ஓய்வில் இருந்ததாகவும் கூறப்படுகிறது. அதன் பின்னர் வரும் திரயோதசி நாளில், பகலும் இரவும் சந்திக்கும் சந்தியா வேளையில் சிவபெருமான் திருநடனம் புரிந்ததாக நம்பப்படுகிறது.
இந்தப் பிரதோஷ வேளையில் தான் சிவபெருமான் நிருத்தம் எனப்படும் திருநடனத்தை ஆடத் தொடங்கிய போது, தேவர்கள் அனைவரும் பேரானந்தம் அடைந்ததாகக் கூறப்படுகிறது. அவர்கள் தங்கள் கரங்களை உயர்த்தி “சிவ சிவ” என்று முழங்கினர். பிரதோஷ காலத்தில் சிவபெருமான் திருநடனம் புரிந்ததால், அவர் “சந்த்யாந்ருத்த மூர்த்தி” என்று அழைக்கப்படுகிறார்.



