Last Updated:
வாக்காளர் பட்டியல் திருத்தப்பணியில் தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் தன்னிச்சையாக செயல்படுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ள நிலையில் அவரை கைது செய்ய வேண்டும் என மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார்.
ஆனால், கடந்த 10 மாதங்களில், ஞானேஷ் குமாருக்கு எதிராக தேர்தல் ஆணையர்கள் சுக்பீர் சிங் சாந்து மற்றும் விவேக் ஜோஷி குறைந்தது 14 முறை அதிகாரப்பூர்வமாக ஆட்சேபனை கருத்தை பதிவு செய்திருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
குறிப்பாக, புதிய வாக்காளர்களைச் சேர்த்தல், வாக்காளர் பெயர்களை நீக்குதல் உள்ளிட்ட எஸ்.ஐ.ஆர். பணிகள் மற்றும் வாக்காளர் பட்டியல் தரவுகளை நிர்வகிக்கும் மென்பொருளில் தங்களது கருத்தை ஏற்காமல் சில முடிவுகள் எடுக்கப்பட்டதாக இரு தேர்தல் ஆணையர்களும் தெரிவித்ததாக கூறப்படுகிறது.
வாக்காளர் பட்டியலில் யாருடைய பெயரை சேர்ப்பது, நீக்குவது என்பதை டெல்லியில் இருந்து கட்டுப்படுத்தக் கூடாது என்பதே இரு ஆணையர்களின் முக்கிய ஆட்சேபனைகளாக இருந்தன என தகவல் வெளியாகி உள்ளது. வாக்காளர் பட்டியல் தொடர்பான தகவல் தொழில்நுட்ப அமைப்புகளும் படிப்படியாக மையப்படுத்தப்படுவது குறித்தும் அவர்கள் கவலை தெரிவித்ததாக கூறப்படுகிறது.
இதற்கு நாட்டின் பல்வேறு அரசியல் கட்சியினரும் தங்களது கடும் கண்டனத்தைத் தெரிவித்து, தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் உடனடியாக பதவி நீக்கம் செய்யப்பட வேண்டும் எனத் தெரிவித்துவருகின்றனர். திமுக தலைவர் மு.க. ஸ்டாலின், “தனி ஆவர்த்தனம் செய்த தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் இனியும் பதவியில் நீடிக்க கூடாது: உடனடியாக அவர் நீக்கப்பட வேண்டும்” எனத் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் “S.I.R விவகாரத்தில் தேர்தல் ஆணையர்கள் கருத்தைக் கேட்காத தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமாரை கைது செய்ய வேண்டும். மேற்கு வங்கம் உள்ளிட்ட மாநிலங்களில் மறுதேர்தல் நடத்த வேண்டும்” என மேற்குவங்க முன்னாள் முதலமைச்சர் மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார்.


