மட்டக்களப்புப் பிரதேசத்தைச் சேர்ந்த 13 வயது சிறுமி ஒருவரைப் பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்திய சிறுமியின் சித்தப்பாவான 35 வயதுடைய க.ஜெயானந்தம் என்பவருக்கு, இரு குற்றங்களுக்கும் சேர்த்து 12 வருட கடூழிய சிறைத் தண்டனையும் 10 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்த மட்டக்களப்பு மேல் நீதிமன்ற நீதிபதி ரி.ஜே.பிரபாகரன், பாதிக்கப்பட்ட சிறுமிக்கு 50 ஆயிரம் ரூபா நஷ்டஈடு வழங்குமாறும் வெள்ளிக்கிழமை (18) தீர்ப்பளித்தார்.
கடந்த 2019 ஆம் ஆண்டு மே மாதம் 19ஆம் திகதியன்று, 13 வயது சிறுமியை அவரது சித்தப்பாவான 35 வயதுடைய கனகரெத்தினம் ஜெயானந்தம் அல்லது சிவானந்தம் என்பவர் பாலியல் துஷ்பிரயோகம் செய்ததாகச் சிறுமியின் உறவினர்கள் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்ததையடுத்து, அவரைப் பொலிஸார் கைது செய்தனர்.
இவ்வாறு கைது செய்யப்பட்டவருக்கு எதிராக, தண்டனைச் சட்டக்கோவையின் 354ஆவது பிரிவின் கீழ் சிறுமியைக் கவர்ந்து சென்றமை மற்றும் தண்டனைச் சட்டக்கோவையின் 364ஆவது பிரிவின் கீழ் பாலியல் துஷ்பிரயோகம் செய்தமை ஆகிய இரு குற்றச்சாட்டின் கீழ் பொலிஸார் மட்டக்களப்பு மேல் நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்தனர்.
இதனையடுத்து, குறித்த வழக்கு விசாரணை தொடர்ந்து இடம்பெற்று வந்த நிலையில், வழக்குத் தொடுநர் சார்பில் அரச சட்டவாதிகளான எஸ்.அனுஷாங்கன் மற்றும் பி.தர்சிகா ஆகியோர் ஆஜராகி வாதாடி வந்தனர்.
இந்த நிலையில், குறித்த நபர் குற்றவாளியாகக் கடந்த மாதம் (08) மன்றில் இனங்காணப்பட்டு, கடந்த வெள்ளிக்கிழமை (18ஆம் திகதி) தண்டனை வழங்கும் தீர்ப்பு என நீதிபதி அறிவித்தார்.
இதன் பிரகாரம், குறித்த வழக்கின் தண்டனைக்கான தீர்ப்பாக, முதலாவது குற்றமான சிறுமியைக் கவர்ந்து சென்ற குற்றத்துக்கு 2 வருட கடூழிய சிறைத் தண்டனையும் 5 ஆயிரம் ரூபாய் அபராதமும் செலுத்துமாறும், இரண்டாவது குற்றமான பாலியல் துஷ்பிரயோகம் செய்தமைக்கு 10 வருட கடூழிய சிறைத் தண்டனையும் 5 ஆயிரம் ரூபா அபராதமும் விதித்த மேல் நீதிமன்ற நீதிபதி ரி.ஜே.பிரபாகரன், பாதிக்கப்பட்ட சிறுமிக்கு 50 ஆயிரம் ரூபாய் நஷ்டஈடு வழங்குமாறும் தீர்ப்பளித்தார்.
கனகராஜா சரவணன்

