
ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல் வழக்கில் குற்றவாளிகளான 15 பேருக்கு 200 முதல் 260 ஆண்டுகள் வரை கடூழிய சிறைத்தண்டனை மற்றும் சொத்துக்களை அரசுடைமையாக்க கொழும்பு மேல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
நாட்டில் 2019ஆம் ஆண்டு இடம்பெற்ற ஈஸ்டர் ஞாயிறு தொடர் தற்கொலை குண்டுத் தாக்குதல்களுடன் தொடர்புடைய வழக்கில் குற்றவாளிகளாகக் காணப்பட்ட 15 பிரதிவாதிகளுக்கும் 200 முதல் 260 ஆண்டுகள் வரையிலான கடூழிய சிறைத்தண்டனை விதித்து, கொழும்பு நிரந்தர மூவரடங்கிய மேல் நீதிமன்ற நீதிபதிகள் குழாம், நேற்றிரவு (22) தீர்ப்பளித்துள்ளது.
பயங்கரவாதத் தாக்குதல்களுக்கு சதித்திட்டம் தீட்டியமை, அதற்கு உடந்தையாகச் செயற்பட்டமை மற்றும் தீவிரவாதப் பிரசார உரைகளை நிகழ்த்தியமை உள்ளிட்ட குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்ட நிலையிலேயே இந்த தண்டனை விவரங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.
இதன்படி, குற்றவாளிகளில் 05 பேருக்கு தலா 200 ஆண்டுகளும், மேலும் 05 பேருக்கு தலா 220 ஆண்டுகளும், 04 பேருக்கு தலா 240 ஆண்டுகளும், ஒருவருக்கு அதிகபட்சமாக 260 ஆண்டுகளும் கடூழிய சிறைத்தண்டனை விதித்து, நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
அத்துடன், தண்டனை விதிக்கப்பட்ட 15 குற்றவாளிகளினதும் தண்டனைக் காலம் ஆரம்பமாகும் திகதியிலிருந்து நடைமுறைக்கு வரும் வகையில், அவர்களுக்குச் சொந்தமான அசையும் மற்றும் அசையாச் சொத்துகள் அனைத்தையும் உடனடியாக அரசுடைமையாக்கி பறிமுதல் செய்யுமாறும் மூவரடங்கிய மேல் நீதிமன்ற நீதிபதிகள் குழாம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

