35 லட்சம் சம்பளம்.. ஆனா வேலை செய்ய முடியல.. 6 மாசம் பிரேக் வேணும்.. புலம்பும் பெங்களூர் ஐடி ஊழியர்..!
சமீபத்தில் சமுக வலைத்தளத்தில் மக்கள் தங்களுடைய பணி குறித்தும், பணியிடத்தில் எதிர்கொள்ளும் பிரச்சனைகள் குறித்தும் அதிகம் பேசி வருகின்றனர். அந்த வகையில் ரெட்டிட் தளத்தில் பெங்களூர் ஐடி ஊழியர் செய்த பதிவு தற்போது மிகப்பெரிய அளவில் வைரலாகியுள்ளது.
இந்த ரெட்டிட் பதிவில், தனக்கு 28 வயதாகிறது, ஐடித் துறையில் சுமார் 6 வருடம் அனுபவத்துடன் வருடம் 30-35 லட்சம் வரையில் சம்பளம் பெறுவதாகக் குறிப்பிட்டு உள்ளார்.

ஆனால் தற்போது பணியில் தான் burned out நிலையை எட்டியதாக நினைக்கும் அந்த நபர் என்னுடைய உடல் நலம், குடும்பத்துடன் நேரத்தைச் செலவு செய்வது, பயணம், வாழ்க்கையின் அடுத்தகட்டத்திற்கு தனக்கு என்ன வேண்டும் என்பதை முடிவு செய்ய 3-6 மாதம் பணியில் இருந்து விடுப்பு பெறலாம் என திட்டமிட்டு வருவதாக இந்த பதிவில் தெரிவித்துள்ளார்.
இவருடைய பதிவுக்குப் பலரும் பல விதமான பதில்களை அளித்துள்ளனர். இதற்கு முன்பு burned out நிலை என்றால் என்ன என்பதை தெரிந்துகொள்ள வேண்டும்.
பணியிடத்தில் burned out என்பது தொடர் பணிச் சுமை மூலம் ஏற்படும் சோர்வு நிலையாகும். இது பெரும்பாலும் பணியிடத்தில் ஏற்படும் மன அழுத்தத்தினால் உருவாகும் ஒரு கடுமையான மன மற்றும் உடல் சோர்வு நிலையாகும்.
இந்த மன அழுத்தம் வேலையை சீக்கிரம் முடிக்க வேண்டும் என்பதில் துவங்கி, டார்கெட் அடைவது, அலுவலக அரசியல், பணியில் முன்னேற்றம் இல்லாமல் இருப்பது, சம்பளத்தில் போதுமான மாற்றங்கள் இல்லாமல் இருப்பது போன்ற பல விஷயங்களால் இத்தகைய மன அழுத்தம் வரும். இத்தகைய மன அழுத்தத்தை முறையாக கையாள வேண்டியது கட்டாயம்.
இந்த நபர் தனது பதிவில் தன்னிடம் எவ்விதமான கடன் நிலுவை இல்லை என்றும், பெற்றோர்களும் நிதி சுதந்திரமாக இருக்கிறார்கள், மனைவியும் வேலைக்கு செல்கிறார், மாதம் வீட்டு செலவு 1.5 லட்சம் வரையில் செலவாகிறது என்ற தகவலையும் தெரிவித்துள்ளார்.
இந்த ரெட்டிட் பதிவுக்குப் பெரும்பாலானோர் கொடுக்க ஒற்றை பதில், இந்த நபர் கடன் சுமை இல்லாமலும், போதுமான சேமிப்பு உடனும் இருக்கும் நிலையிலும், மனைவியும் வேலைக்கு செல்லும் காரணத்தால் வீட்டு செலவுகள், அவசர செலவுகளுக்கு போதுமான நிதி ஆதாரம் உள்ளது. இந்த நிலையில் அவர் தாராளமாக விடுப்பு எடுக்கலாம் என தெரிவித்துள்ளார்.
இதேபோல் மேலும் சிலர் 6 மாதம் விடுப்பு என்பது கரியரில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தாது எனவும் பலர் தெரிவித்துள்ளனர். இதேபோல் இந்த 6 மாதத்தில் வெறுமனே ரெஸ்ட் எடுக்கும் பணியை செய்ய வேண்டாம், ஆக்கப்பூர்வமான பணிகளைச் செய்யவும் அறிவுறுத்தியுள்ளனர்.
இந்த நபருக்கு உங்களுடைய அட்வைஸ் என்னவாக இருக்கும்..? அதேபோல் இத்தகைய மன அழுத்தம் நீங்கள் எப்படி எதிர்கொள்வீர்கள்..?

