Last Updated:
கடந்த 2022-ஆம் ஆண்டு சீனாவின் ஹாங்சூ நகரில் நடைபெற்ற ஆசிய விளையாட்டுப் போட்டியின் இறுதிப்போட்டியிலும் இலங்கை அணியை வீழ்த்தி இந்தியா தங்கம் வென்றிருந்தது
ஜப்பானில் நடைபெற்று வரும் ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் (Asian Games 2026), இந்திய மகளிர் கிரிக்கெட் அணி தங்களது முதல் தங்கப் பதக்கத்தை வென்று நாட்டிற்குப் பெருமை சேர்த்துள்ளது. இன்று நடைபெற்ற பரபரப்பான இறுதிப் போட்டியில், இலங்கை மகளிர் அணியை 147 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்திய அணி அபார வெற்றி பெற்றது.
கடந்த 2022-ஆம் ஆண்டு சீனாவின் ஹாங்சூ நகரில் நடைபெற்ற ஆசிய விளையாட்டுப் போட்டியின் இறுதிப்போட்டியிலும் இலங்கை அணியை வீழ்த்தி இந்தியா தங்கம் வென்றிருந்தது. தற்போதைய வெற்றியின் மூலம், தொடர்ச்சியாக இரண்டாவது முறையாக ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் தங்கப் பதக்கத்தைத் தக்கவைத்துக்கொண்டு இந்திய அணி சாதனை படைத்துள்ளது.
கொரோகி ஸ்போர்ட்ஸ் பார்க் மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில், டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங் செய்ய தீர்மானித்தது. தொடக்கம் முதலே இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர்களான ஸ்மிருதி மந்தனா மற்றும் ஷஃபாலி வர்மா ஆகியோர் அதிரடியாக விளையாடி ரன்களைக் குவித்தனர்.
பவர்-பிளே முடிவில் இந்திய அணி விக்கெட் இழப்பின்றி 59 ரன்கள் எடுத்தது. இந்த இணை முதல் விக்கெட்டுக்கு 60 பந்துகளில் 99 ரன்கள் சேர்த்து வலுவான அடித்தளத்தை அமைத்தது. ஷஃபாலி வர்மா 29 பந்துகளில் 48 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார்.
அவரைத் தொடர்ந்து அபாரமாக ஆடிய ஸ்மிருதி மந்தனா 45 பந்துகளில் 79 ரன்கள் (7 சிக்ஸர்கள் உட்பட) விளாசி ஆட்டமிழந்தார். கேப்டன் ஹர்மன்பிரீத் கவுர் 19 ரன்கள் எடுத்தார். இறுதிக்கட்டத்தில் விக்கெட் கீப்பர் ரிச்சா கோஷ் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தி 22 பந்துகளில் ஆட்டமிழக்காமல் 49 ரன்கள் குவித்தார். இதன் மூலம் இந்திய அணி 20 ஓவர்களில் 3 விக்கெட் இழப்பிற்கு 216 ரன்கள் என்ற ஆசிய விளையாட்டு வரலாற்று சாதனையான பிரம்மாண்ட இலக்கை எட்டியது.
217 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற மிகப்பெரிய இலக்குடன் களமிறங்கிய இலங்கை அணிக்குத் தொடக்கம் சாதகமாக அமையவில்லை. ஆரம்பத்தில் சில பவுண்டரிகள் அடித்த போதிலும், ஷஃபாலி வர்மா வீசிய பந்தில் இமேஷா துலானி (3) ஆட்டமிழந்தார்.
பவர்-பிளேவுக்குப் பிறகு, இந்திய பந்துவீச்சாளர்களின் துல்லியமான பந்துவீச்சை எதிர்கொள்ள முடியாமல் இலங்கை பேட்டர்கள் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தனர். இலங்கை அணியின் கேப்டன் சாமரி அத்தபத்து மட்டும் ஓரளவு போராடி 29 ரன்கள் எடுத்தார். மற்ற வீரர்கள் அனைவரும் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர்.
இறுதியில் இலங்கை அணி 15.4 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 69 ரன்களுக்குச் சுருண்டது. இதன் மூலம் இந்திய அணி 147 ரன்கள் வித்தியாசத்தில் பிரம்மாண்ட வெற்றியைப் பதிவு செய்து, 2026 ஆசிய விளையாட்டுப் போட்டியில் இந்தியாவின் முதல் தங்கப் பதக்கத்தைக் கைப்பற்றி வரலாறு படைத்துள்ளது.


