18 ஆண்டுகளுக்கு முன்னர் திருகோணமலையில் இரண்டு தமிழ் பெண்கள் வெள்ளை வானில் கடத்தப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடைய இரண்டு ஓய்வுபெற்ற கடற்படை சிப்பாய்கள் (பெண்) குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் பாரிய கொள்ளை விசாரணைப் பிரிவினரால் கடந்த 20ஆம் திகதி கைது செய்யப்பட்டுள்ளனர்.
இவ்வாறு கைது செய்யப்பட்டவர்கள் சிலாபம், அளுத்வத்தையைச் சேர்ந்த 42 வயதுடைய ஓய்வுபெற்ற கடற்படை சிப்பாய் (பெண்) மற்றும் ஹப்புத்தளை, தொடருந்து நிலைய வீதியில் வசித்து வந்த மற்றுமொரு ஓய்வுபெற்ற கடற்படை சிப்பாய் (பெண்) ஆவார்.
2008 ஆம் ஆண்டு கடத்தப்பட்ட பெண்கள்
2008 ஆம் ஆண்டு ஜனவரி 13 ஆம் திகதி திருகோணமலை பிரதேசத்தில் வசித்து வந்த மேரி டிலிசியா மற்றும் சசிகுமார் தேன்மொழி ஆகிய இரண்டு பெண்கள் இவ்வாறு கடத்தப்பட்டுள்ளனர்.

‘சன்சைட்’ நிலத்தடி அறையில் அடைத்து சித்திரவதை செய்து கொலை
பின்னர் அவர்கள் திருகோணமலை கடற்படை முகாமில் அமைந்துள்ள ‘சன்சைட்’ எனப்படும் நிலத்தடி தடுப்பு அறையில் அடைத்து வைக்கப்பட்டு கொடூரமாக சித்திரவதை செய்யப்பட்டு பாலியல் அத்துமீறலுக்கு உட்படுத்தப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளதாக விசாரணைகளில் தகவல்கள் வெளியாகியுள்ளதாக இரகசிய காவல்துறை உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

கைது செய்யப்பட்ட சந்தேகநபரான இரண்டு பெண் அதிகாரிகள் தொடர்பாக மேலதிக விசாரணைகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில், அந்த விசாரணைகளின் பின்னர் அவர்களை திருகோணமலை நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்த குற்றப் புலனாய்வுத் திணைக்களம் நடவடிக்கை எடுத்து வருகிறது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்…! |

