Last Updated:
வில்லங்க சான்று உள்ளிட்ட விஷயங்களில் நடைமுறைகளை மாற்ற பதிவுத்துறை முடிவு செய்துள்ளது.
நேரடி வருகையில்லா முறையில், பத்திரப்பதிவு மேற்கொள்ள கட்டணமில்லா வில்லங்க சான்றிதழை இணைத்தால் போதும் என்று பதிவுத்துறை உத்தரவிட்டுள்ளது. இது தொடர்பான முழு விவரங்களை தற்போது இந்த பதிவில் விரிவாக பார்ப்போம்.
தமிழகத்தில் புதிய திட்டங்களில் வீடு, மனை வாங்குவதற்கான பத்திரம், வங்கியில் கடன் பெறுவோர் ஆவண ஒப்படைப்பு அடமானம், கடன் நிறைவுக்கான ரசீது போன்ற ஆவணங்களை ‘ஆன்லைன்’ முறையில் பதிவு செய்யலாம் என்று கூறப்பட்டுள்ளது. அதன்படி, சார் பதிவாளர் அலுவலகம் செல்லாமலேயே இந்த ஆவணங்களை பதிவு செய்யும் திட்டம் அமலுக்கு வந்துள்ளது. அந்த வகையில், நேரடி வருகை இல்லாமல் பத்திரங்களை பதிவுக்கு தாக்கல் செய்யும்போது கட்டணம் செலுத்தி பெறப்படும் வில்லங்க சான்றிதழ் அவசியம் என்று கூறப்பட்டுள்ளது.
பல்வேறு தரப்பினரின் வலியுறுத்தலை ஏற்று, வில்லங்க சான்று உள்ளிட்ட விஷயங்களில் நடைமுறைகளை மாற்ற பதிவுத்துறை முடிவு செய்துள்ளது. இது தொடர்பாக, பதிவுத்துறை ஐஜி அருண் சுந்தர் தயாளன் பிறப்பித்துள்ள உத்தரவில், புதிய திட்டங்களில் வீடு, மனை விற்பனை பத்திரங்கள் மற்றும் அடமான ஆவணம் போன்றவற்றை பதிவு செய்ய கட்டணமின்றி இணையதளத்தில் பெறப்படும் வில்லங்க சான்றிதழ் போதுமானது என்று கூறப்பட்டுள்ளது.
அதேபோல், ஆவண ஒப்படைப்பு அடமான பத்திரங்களை குடிமக்கள் நுழைவு வாயிலாக தாக்கல் செய்யப்பட்டாலும் பதிவுக்கு ஏற்கப்படும் என்றும், கடன் நிறைவு தொடர்பான ரசீது ஆவணங்களை பதிவு செய்ய வில்லங்க சான்று பார்க்க தேவையில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், நேரடி வருகையில்லா பத்திரப்பதிவுக்கு விடுமுறை நாள் கட்டணம் செலுத்த வேண்டாம் என்றும், நேரடி வருகையில்லா பத்திரப்பதிவில் ஆவணதாரர் எங்கிருந்தாலும் இணையதளம் மூலம் பதிவு செய்ய முடியும் என்பதால், ‘பிரசன்டேஷன் பவர்’ எனப்படும் சிறப்பு பொது அதிகார ஆவணங்களை பயன்படுத்த முடியாது என்றும் அந்த உத்தரவில் கூறப்பட்டுள்ளது.

