Last Updated:
உக்ரைன் போரில் ஒவ்வொரு மாதமும் குறைந்தது 25,000 பேர் கொல்லப்படுவதால் ஒட்டுமொத்த உலகமும் கவலை அடைவதாகக் கூறியுள்ளார் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்.
ரஷ்யாவின் எண்ணெய் சுத்திகரிப்பு நிலையங்கள் மீதான தாக்குதல்களை நிறுத்துமாறு உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கியை அமெரிக்க அதிபர் டிரம்ப் மீண்டும் வலியுறுத்தியுள்ளார்.
இது தொடர்பாக தனது ட்ரூத் சமூக வலைதளப் பக்கத்தில் பதிவிட்டுள்ள டிரம்ப், உக்ரைன் போரால் ரஷ்யா தனது கச்சா எண்ணெய் துறையின் மீதான கட்டுப்பாட்டை இழந்துவிட்டதாகத் தெரிவித்துள்ளார். பல சுத்திகரிப்பு நிலையங்கள் மீதான தாக்குதல்களால் அவை செயலிழந்து இருப்பதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். உக்ரைன் உடனான இந்த அபத்தமான மற்றும் முடிவில்லாத போரை முடிவுக்கு கொண்டு வர வேண்டும் எனத் தெரிவித்துள்ள டிரம்ப், ஒவ்வொரு மாதமும் குறைந்தது 25,000 பேர் கொல்லப்படுவதால் ஒட்டுமொத்த உலகமும் கவலை அடைவதாகக் கூறியுள்ளார்.
இதனிடையே CNN, MS NOW, மற்றும் Politico ஆகிய செய்தி ஊடகங்களுக்கு வெள்ளை மாளிகையில் அனுமதி மறுக்கப்பட்டதை கண்டித்து, டிரம்பின் வெள்ளை மாளிகை நிகழ்ச்சிகளை ஒளிபரப்ப போவதில்லை என அந்நாட்டின் ஊடக கூட்டமைப்பு அறிவித்துள்ளது. அரசுக்கு எதிரான செய்திகளை வெளியிடுவதாகக் கூறி, வெள்ளை மாளிகைக்குள் வர 3 செய்தி நிறுவனங்களுக்கு டிரம்ப் தடை விதித்திருந்தார். இதை கண்டித்துள்ள ஊடக கூட்டமைப்பு, எந்தவொரு அரசும் செய்தி நிறுவனங்களின் உரிமைகளைப் பறிக்கக் கூடாது எனத் தெரிவித்துள்ளது.

