
அவுஸ்திரேலியாவின் சிட்னி நகரில் கரோலின் என்ற மூதாட்டியின் உடல் அந்நாட்டிலேயே முதல்முறையாக மைசீலியம் பூஞ்சையால் தயாரிக்கப்பட்ட சவப்பெட்டியில் நல்லடக்கம் செய்யப்பட்டுள்ளது.
அவுஸ்திரேலியாவின் சிட்னி நகரில் உயிரிழந்த 70 வயதுடைய கரோலின் என்ற மூதாட்டி, அந்நாட்டிலேயே முதன்முறையாகப் பூஞ்சையின் உதவியுடன் தயாரிக்கப்பட்ட சவப்பெட்டியில் நல்லடக்கம் செய்யப்பட்டுள்ளார். சுற்றுச்சூழல் விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் அமைந்த இந்த இறுதிச்சடங்கு பலரது கவனத்தையும் ஈர்த்துள்ளது.
லூப் பயோடெக் என்ற நிறுவனம் இந்தச் சூழல் நட்பு சவப்பெட்டியை உருவாக்கியுள்ளது. மைசீலியம் என்ற பூஞ்சை வேரமைப்புடன் வேளாண்மைக் கழிவான சணல் நாரை இணைத்து, கட்டுப்படுத்தப்பட்ட பிரத்யேக சூழலில் தொழில்நுட்ப உதவியுடன் இந்த சவப்பெட்டி வடிவமைக்கப்பட்டுள்ளது.
வழக்கமான மரச் சவப்பெட்டிகள் மண்ணோடு மண்ணாக மட்குவதற்கு சுமார் 50 ஆண்டுகள் வரை தேவைப்படும் நிலையில், இந்த மைசீலியம் சவப்பெட்டி வெறும் 45 நாட்களில் முழுமையாக மட்கிவிடும் தன்மை கொண்டது. அத்துடன், நிலத்தை மாசுபடுத்தாமல் சுற்றியுள்ள மண்ணை மேலும் வளப்படுத்தவும் இது உதவுகிறது.
தற்போது பல்வேறு நாடுகளில் உடல்களை அடக்கம் செய்வதில் இட நெருக்கடி உள்ளிட்ட சிக்கல்கள் நீடிக்கின்றன. அதேவேளை உடல்களைத் தகனம் செய்வதால் காற்று மாசுபாடு ஏற்படுவதுடன், மாற்றுத் தகன முறைகளும் பரவலான ஏற்பைப் பெறாத சூழலில், பூஞ்சை சவப்பெட்டி முறையானது இயற்கையோடு இணைந்த சிறந்த மாற்றாகப் பார்க்கப்படுகிறது.
