கோலாலம்பூர்:
முன்னாள் பிரதமர் டத்தோஸ்ரீ நஜிப் ரசாக் தொடர்பான அண்மைக்கால நிகழ்வுகளைத் தொடர்ந்து, மலேசியா மற்றும் வெளிநாடுகளிலுள்ள பல நண்பர்கள் தங்களுக்கு நிதியுதவிகளை வழங்க முன்வந்துள்ளதாக நஜிப்பின் மனைவி டத்தின்ஸ்ரீ ரோஸ்மா மன்சூர் நெகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார்.
இது குறித்து நேற்று (செப்டம்பர் 20) தனது Facebook பக்கத்தில் பதிவிட்டுள்ள ரோஸ்மா, புரூணை, இத்தாலி, சிங்கப்பூர் மற்றும் கனடா உள்ளிட்ட பல நாடுகளிலிருந்தும் தங்களது குடும்பத்தினரைத் தொடர்புகொண்டு மகிழ்ச்சியையும், நிதியுதவி அளிக்கத் தயார்நிலையையும் தெரிவித்து வருவதாகக் குறிப்பிட்டுள்ளார்.
“டத்தோஸ்ரீ மீண்டும் குடும்பத்துடன் இணைய வேண்டும் என்பதே அவர்களின் ஒரே ஆசை. இத்தனை மனிதர்கள் இன்னும் எங்கள் மீது அக்கறை கொண்டு, இவ்வளவு உண்மையான அன்புடன் உதவ முன்வருவார்கள் என்று நான் நினைத்துக் கூடப் பார்க்கவில்லை. இன்பத்திலும் துன்பத்திலும் எங்களுடன் உறுதியாக நிற்கும் உண்மை நண்பர்கள் யார் என்பதை இன்று நான் உணர்ந்து கொண்டேன்.”என்று இந்தப்பதிவில் டத்தின்ஸ்ரீ ரோஸ்மா மன்சூர் கூறியிருந்தார்.
தங்களுக்கு ஆதரவாக இருக்கும் அனைத்து நல்நெஞ்சங்களுக்கும், அவர்களின் பிரார்த்தனை மற்றும் அன்பிற்கும் ரோஸ்மா தனது நன்றியைத் தெரிவித்துக் கொண்டார்.
கடந்த வெள்ளிக்கிழமை கூட்டரசு பிரதேச மன்னிப்பு வாரியத்தின் பரிந்துரையின் பேரில், RM50 மில்லியன் அபராதத்தைச் செலுத்துவதற்கு உட்பட்டு நஜிப்பிற்கு நிபந்தனையுடன் கூடிய மன்னிப்பு வழங்கப்பட்டது. இதன் மூலம், வரும் ஆகஸ்ட் 23, 2028 வரை அவர் தனது எஞ்சிய தண்டனையை வீட்டுக்காவலில் அனுபவிக்க அனுமதி அளிக்கப்பட்டது.
இது குறித்துப் பேசிய நஜிப்பின் மகள் நூரியானா நஜ்வா, நஜிப்பை வீட்டுக்காவலில் விடுவிப்பதற்கான அதிகாரப்பூர்வ உத்தரவைப் பெறுவதற்கு முன்பாக, சேகரிக்கப்படும் அபராதத் தொகையானது உரிய அதிகாரப்பூர்வ வழிகள் மூலம் உடனடியாகச் செலுத்தப்படும் எனக் குறிப்பிட்டுள்ளார்.



