International
oi-Mani Singh S
தெஹ்ரான்: ஈரானுக்கும் அமெரிக்காவுக்கும் இடையே கடந்த பிப்ரவரி மாதம் போர் வெடித்தது. இருநாடுகளுக்கும் இடையேயான போரில் இன்னும் முடிவு எட்டப்படாமல் மோதல் நீடித்துக்கொண்டே வருகிறது. இருநாடுகளுக்கும் இடையே போடப்பட்ட இடைக்கால ஒப்பந்தத்திலும் ஆக்கப்பூர்வமான எந்த இறுதி முடிவு எட்டப்படாததால், மேற்காசியாவில் பதற்றம் நீடித்த வண்ணமே உள்ளது.
இரு நாடுகளுக்கும் இடையே நேரடி தாக்குதல் குறைந்துவிட்டது. இருந்தாலும் அங்கு இன்னமும் போர்சூழலே நீடித்து வருகிறது. வளைகுடாவில் நிலவும் இந்த பதற்றம் காரணமாக கச்சா எண்ணெய் விலையும் உயர்கிறது. இதனால் சர்வதேச அளவில் எண்ணெய் விநியோகம் கடும் நெருக்கடியை சந்தித்து வருகிறது. இந்த சூழலில்தான் ஈரான் மீது மீண்டும் மிகப்பெரிய அளவில் தாக்குதலுக்கு அமெரிக்கா தயாராகி வருவதாக ஈரான் தெரிவித்துள்ளது. ஈரான் ராணுவ தலைமை இது தொடர்பாக கூறியிருப்பதாவது:-

எங்களுக்கு கிடைத்த தகவல்களின் படி, சியோனிஸ்ட்களின் பொய் மற்றும் தந்திரங்களின் அடிப்படையில் தொடங்கப்பட்ட போரில், அமெரிக்கா தனது தோல்விகளை மூடி மறைக்கவும், போலியான ஆதாயங்களைப் பெறுவதற்காகவும் சில பிராந்திய நாடுகளின் இசைவுடனும் ஈரானுக்கு எதிரான நடவடிக்கைகளைத் தொடர முடிவு செய்துள்ளது. அமெரிக்காவுக்கு உதவும் நாடுகளும் பகையாளிகளாகவே நடத்தப்படுவார்கள்.
ஈரான் ஆயுதப்படையிடம் இருந்து கட்டுப்பாட்டான அணுகுமுறையை இனிமேலும் அவர்களால் எதிர்பார்க்க முடியாது” என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. முன்னதாக ஈரான் தேசிய பாதுகாப்பு கவுன்சில் தலைவர் மொஹசன் ரேசாய், அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தையை தொடங்க 7 நிபந்தனைகளை முன்வைத்து இருந்தார். மேலும் ஈரான் தீவிரமான போருக்கு தயாராக இருப்பதாகவும் கூறியிருந்தார்.
இதற்கிடையே, மேற்காசியாவில் பதற்றம் அதிகரித்து வரும் நிலையில், அமெரிக்கர்கள், மிகுந்த கவனமுடன் இருக்க வேண்டும் என்று அமெரிக்க வெளியுறவு அமைச்சகம் பாதுகாப்பு அறிவுரை விடுத்து இருந்தது. மேற்காசிய நாடுகளுக்கு செல்லும் திட்டம் இருந்தால் அதனை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்றும் பாதுகாப்பு சூழல் அங்கு தொடர்ந்து சிக்கலாகவே இருப்பதாகவும் எச்சரித்து இருந்தது. மேற்காசிய நாடுகளின் வழியாக விமானங்களில் பயணிப்பவர்களும் விமானங்கள் ரத்து, வான்வழி போக்குவரத்து கட்டுப்பாடு போன்ற பயண இடையூறுகளை எதிர்கொள்ள வேண்டியிருக்கும் எனவும் எச்சரித்து இருந்தது.
சவுதி – ஹவுதி கிளர்ச்சியாளர்கள் இடையேயான மோதலால் ஒருபக்கம் மத்திய கிழக்கில் பதற்றம் அதிகரித்துள்ள நிலையில் அமெரிக்காவும் ஈரானும் மீண்டும் முழு அளவிலான போருக்கு தயராகி வருவதாக வெளியாகும் தகவல்கள் சர்வதேச அளவில் உன்னிப்பாக கவனிக்கப்படுகிறது. ஏற்கனவே, எண்ணெய் விநியோகத்தில் கடும் பாதிப்பு ஏற்பட்டு கச்சா எண்ணெய் விலை கடுமையாக உயர்ந்து வரும் நிலையில், இந்த பதற்றம் நிலமையை இன்னும் மோசமாக்கும் என்ற கவலையும் சர்வதேச நாடுகள் மத்தியில் எழுந்துள்ளன.



