மலாக்கா மாநிலத் தேர்தல் மற்றும் 16-வது பொதுத் தேர்தலுக்கு (GE16) முன்னதாக, அரசியல் ஒத்துழைப்பு குறித்து பெர்சத்து (Bersatu) கட்சியுடன் பாகாத்தான் ஹராப்பான் (PH) எந்தப் பேச்சுவார்த்தையையும் நடத்தவில்லை என்று பக்காத்தான் ஹராப்பான் தகவல் தொடர்பு இயக்குனர் ஃபஹ்மி ஃபட்ஸில் கூறினார். அரசியல் ஒத்துழைப்புக்கான சாத்தியக்கூறுகளை அந்தக் கூட்டணி முற்றிலுமாக நிராகரிக்கவில்லை என்றாலும், இதுவரை அத்தகைய நடவடிக்கையை நோக்கிய முயற்சிகள் எதுவும் மேற்கொள்ளப்படவில்லை என்று ஃபஹ்மி கூறியதாக ‘பெரித்தா ஹரியான்’ செய்தி வெளியிட்டுள்ளது.
இதுவரை, நாங்கள் (பக்காத்தான் ஹரப்பான்) பெர்சத்து கட்சியுடன் அரசியல் ஒத்துழைப்பு குறித்து எந்தப் பேச்சுவார்த்தையையும் நடத்தவில்லை. குறிப்பாக மலாக்கா மாநிலத் தேர்தலை முன்னிட்டு அத்தகைய பேச்சுவார்த்தைகள் எதுவும் நடைபெறவில்லை.
“இன்று இரவு, பிரதமர் (அன்வார் இப்ராஹிம்) மற்றும் சிலாங்கூர் மந்திரி பெசார் அமிருடின் ஷாரி (இவர் பக்காத்தான் ஹராப்பானின் தேர்தல் இயக்குனராகவும் உள்ளார்) ஆகியோர் ஒரு நிகழ்ச்சியைத் தொடங்கி வைப்பதற்காக மஸ்ஜித் தானாவுக்கு (மலாக்காவில் உள்ள பகுதி) செல்லவுள்ளனர். ஒருவேளை, பெர்சத்து தலைவர் முஹிடின் யாசின் குறிப்பிட்டதைத் தாண்டி அவர்களிடம் கூடுதல் தகவல்கள் இருக்கலாம் என்று நெகிரி செம்பிலானின் கோலா பிலாவில் தகவல் தொடர்பு அமைச்சகத்தின் நிகழ்ச்சி ஒன்றை தொடங்கி வைத்த பிறகு செய்தியாளர்களிடம் அவர் கூறினார்.
ஒத்துழைக்க முன்வரும் எந்தவொரு கட்சியுடனும் பேச்சுவார்த்தை நடத்த பெர்சத்து தயாராக இருப்பதாக முஹிடின் நேற்று கூறினார்; ஆனால் அத்தகைய உறவுகள் நேர்மையின் அடிப்படையில் இருக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார். கட்சியின் 10ஆவது ஆண்டு விழாவில் பேசிய அவர், பெர்சத்து கட்சியால் 16-வது பொதுத் தேர்தலில் தனித்துப் போட்டியிட முடியாது என்றும், ஒத்துழைக்க விரும்பும் எந்தவொரு கட்சியுடனும் பேச்சுவார்த்தை நடத்தத் தயாராக இருப்பதாகவும் தெரிவித்தார்.
கட்சியின் இருப்புக்காகக் கூட்டாளிகளைத் தேடினாலும், கொள்கைகளில் எந்தச் சமரசமும் செய்துகொள்ளப்படாது என்று அவர் கட்சி உறுப்பினர்களுக்கு உறுதியளித்தார். தேர்தல் ஒத்துழைப்புக்கான சாத்தியக்கூறுகள் குறித்து ‘மூடா’ (Muda) கட்சியுடன் பெர்சத்து ஏற்கனவே விவாதித்துள்ளதாகவும், அதேவேளையில் ‘புத்ரா’ (Putra) கட்சியும் பெர்சத்துவுடன் இணைந்து செயல்படத் தயாராக இருப்பதை வெளிப்படுத்தியுள்ளதாகவும் முஹிடின் கூறினார்.



