Last Updated:
ரிஸ்வான் மற்றும் இமாம் ஆகிய இருவரிடமும் விசாரணை நடத்தப்பட்ட போதிலும், அவர்கள் மீதான குற்றச்சாட்டுகள் குறித்து தெளிவான விளக்கத்தை விசாரணை அதிகாரிகள் வழங்கவில்லை எனப் புகார்கள் எழுந்துள்ளன
பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனும் விக்கெட் கீப்பருமான முகமது ரிஸ்வான், தன் மீது சுமத்தப்பட்டுள்ள சட்டவிரோத சூதாட்டம் மற்றும் ஆன்லைன் சூதாட்டத் தொடர்புகள் குறித்த விசாரணை தொடர்பாக சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் (ICC) ஊழல் தடுப்புப் பிரிவை (ACU) அணுகியுள்ளார்.
இங்கிலாந்து சுற்றுப்பயணத்தின் போது, லார்ட்ஸ் டெஸ்ட் போட்டியின் போது முகமது ரிஸ்வான், இமாம்-உல்-ஹக் மற்றும் சல்மான் அலி ஆகா ஆகிய மூவரும் சூதாட்ட புகாரின் பேரில் பாகிஸ்தானுக்குத் திரும்ப அழைக்கப்பட்டனர்.
இங்கிலாந்தில் இருந்தபோது, நள்ளிரவில் ரிஸ்வான் மற்றும் இமாம்-உல்-ஹக் ஆகியோரின் செல்போன்கள் பறிமுதல் செய்யப்பட்டு, பாகிஸ்தானின் சைபர் கிரைம் புலனாய்வு முகமையிடம் (NCCIA) தடயவியல் பரிசோதனைக்காக ஒப்படைக்கப்பட்டுள்ளன.
NCCIA விசாரணைக்கு எதிராக ரிஸ்வான் தாக்கல் செய்த மனுவை லாகூர் உயர் நீதிமன்றம் நிராகரித்து, விசாரணை அமைப்பு கேட்கும் கேள்விகளுக்குப் பதிலளிக்குமாறு அறிவுறுத்தியது.
இது தொடர்பாக கேள்வி எழுப்பியுள்ள முகமது ரிஸ்வான் 10 ஆண்டுகளுக்கும் மேலாகப் பாகிஸ்தான் அணிக்காக விளையாடி வரும் தன் மீது இதுவரை எந்த ஊழல் குற்றச்சாட்டும் இல்லாத நிலையில், ஒரு வீரர் மீது சந்தேகம் எழுந்தால் ICC மற்றும் PCB பின்பற்ற வேண்டிய முறையான சட்ட நடைமுறைகள் என்ன என்று விளக்கம் கேட்டுள்ளார்.
ICC ஊழல் தடுப்பு விதிகளின்படி, ஒரு வீரர் மீது ஊழல் சந்தேகம் எழுந்தால் ICC-யின் ஊழல் தடுப்புப் பிரிவே விசாரணையை மேற்கொள்ள வேண்டும். அப்படியிருக்க, பிசிபி (PCB) இந்த விவகாரத்தை ஐசிசியின் கவனத்திற்குக் கொண்டு சென்றுள்ளதா என்று கேள்வி எழுப்பியுள்ளார்.
ரிஸ்வான் மற்றும் இமாம் ஆகிய இருவரிடமும் விசாரணை நடத்தப்பட்ட போதிலும், அவர்கள் மீதான குற்றச்சாட்டுகள் குறித்து தெளிவான விளக்கத்தை விசாரணை அதிகாரிகள் வழங்கவில்லை எனப் புகார்கள் எழுந்துள்ளன.
முன்னதாக, பாகிஸ்தான் சூப்பர் லீக் (PSL) தொடரின் போது ஆன்லைன் சூதாட்ட நிறுவனங்களின் விளம்பரங்களைச் சட்டைகளில் அணிய மறுத்து நேர்மையைப் பேணிய வீரர்களில் ரிஸ்வானும் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது.


