Last Updated:
2023 ஆகஸ்டில் சர்வதேச கிரிக்கெட்டில் அறிமுகமான ரிங்கு சிங், இதுவரை இந்திய அணிக்காக 2 ஒருநாள் போட்டிகள் மற்றும் 48 டி20 போட்டிகளில் விளையாடியுள்ளார்.
இந்தியக் கிரிக்கெட் அணியின் அதிரடி பேட்ஸ்மேன் ரிங்கு சிங் (Rinku Singh), தனக்குத் திருமணம் நெருங்கி வரும் நிலையிலும் கிரிக்கெட் போட்டிகளில் இருந்து எந்தவித ஓய்வும் எடுக்கப் போவதில்லை என்றும், தனது விளையாட்டுப் பயணத்திற்குத் தொடர்ந்து முன்னுரிமை அளிக்கவுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
உத்தரப் பிரதேச மாநிலம் அலிகார் (Aligarh) நகரத்திலிருந்து இந்திய அணிக்கும் ஐபிஎல் (IPL) தொடருக்கும் தேர்வான முதல் கிரிக்கெட் வீரரான ரிங்கு சிங், தனது கடின உழைப்பால் உருவான பயணத்தைப் பற்றிப் பெருமிதம் தெரிவித்துள்ளார்.
இதுபற்றி அவர் கூறுகையில்,”அலிகாரில் இருந்து இந்திய அணிக்காக விளையாடிய முதல் வீரர் நான் தான் என்பதில் பெருமை கொள்கிறேன். சர்வதேச அளவில் நான் எடுத்து வைக்கும் ஒவ்வொரு அடியும் எனது சொந்த ஊருக்கும் ஒரு அடையாளத்தையும் ஊக்கத்தையும் தரும் என நம்புகிறேன்” என்று அவர் கூறியுள்ளார்.
சமாஜ்வாதி கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் பிரியா சரோஜ் (Priya Saroj) என்பவருடன் ரிங்கு சிங்கிற்கு வரும் டிசம்பர் 4-ஆம் தேதி திருமணம் நடைபெறவுள்ளது. திருமணத்திற்கான ஏற்பாடுகள் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், தனது குடும்பத்தினரே அந்தப் பணிகளைக் கவனித்து வருவதாகத் தெரிவித்துள்ளார்.
தொடர்ச்சியான போட்டி அட்டவணைகள் உள்ளதால் திருமணத்திற்காக கிரிக்கெட்டில் இருந்து விடுப்பு எடுக்க முடியாது எனக் கூறியுள்ள ரிங்கு சிங், “திருமண வேலைகளை எனது குடும்பத்தினர் பார்த்துக்கொள்கிறார்கள். ஓய்வு எடுப்பதைப் பொறுத்தவரை, என்னால் எந்தவொரு போட்டியையும் தவிர்க்க முடியாது” என்று சிரித்துக்கொண்டே கூறியுள்ளார்.
2023 ஆகஸ்டில் சர்வதேச கிரிக்கெட்டில் அறிமுகமான ரிங்கு சிங், இதுவரை இந்திய அணிக்காக 2 ஒருநாள் போட்டிகள் மற்றும் 48 டி20 போட்டிகளில் விளையாடியுள்ளார்.


