International
oi-Halley Karthik
பெய்ஜிங்: செமிகண்டக்டர் சிப் என்றாலே NVIDIA தான். இந்நிறுவனம் ஆலமரம் மாதிரி! அசைக்கவே முடியாது.. ஆனால், சீனா அதைவிட பெரிய மரத்தை வளர்த்து வருகிறது. அதன் பெயர்தான் HUAWEI. இனி வரும் காலங்களில் AI செமிகண்டக்டர் என்றால் HUAWEI தான் என்கிற நிலைமை உருவாகி வருகிறது.
ஒரு காலத்தில் மனிதர்கள் உணவுக்கு அடித்துக்கொண்டிருந்தார்கள். பின்னர் நிலம், நீர், தங்கம் என்று தொடங்கிய சண்டை தற்போது செமிகண்டக்டருக்கு வந்து நின்றிருக்கிறது. எந்த நாடு தரமான செமிகண்டக்டர்களை உருவாக்குகிறதோ அதுதான் டாப்பில் இருக்கும்.

அப்படித்தான் அமெரிக்கா இருக்கிறது. அமெரிக்காவின் பலம் NVIDIA. இந்த பலத்தை உடைக்கதான் சீனா.. HUAWEI நிறுவனத்தை இறக்கியிருக்கிறது. இந்நிறுவனம் 2027ம் ஆண்டில் 2 புதிய சிப்களை அறிமுகப்படுத்த திட்டமிட்டிருக்கிறது.
1. 960DT: இது 2027ம் ஆண்டின் முதல் காலாண்டில் அறிமுகப்படுத்தப்படும்.
2. அசெண்ட் 960 பிஆர்(Ascent 960PR): இது 2027ம் ஆண்டின் 3ம் காலாண்டில் வெளியிடப்படும்.
அமெரிக்காவிடம் இல்லாத டெக்னாலஜியே கிடையாது. இருந்தாலும், செமிகண்டக்டர் சிப்களை சீனாவுக்கு அமெரிக்கா கொடுக்கவில்லை. இந்த சிப்களை வைத்து எங்கு தன்னை விட சீனா சீக்கிரமாக மேலே வந்துவிடுமோ என்கிற பயம்தான். இருந்தாலும் சீனா இந்த விஷயத்தை ரொம்பவும் புத்திசாலித்தனமாக அணுகி ஜெயித்திருக்கிறது.
மிகவும் மேம்பட்ட ஏஐ புரோகிராம்களுக்கு ஒரு தனி சிப் வழங்கும் பவரை விட, அதிக பவர் தேவைப்படுகிறது. எனவே, அதிக எண்ணிக்கையிலான AI சிப்களை ஒன்றாக இணைத்து, ஒரே பெரிய கணினி அமைப்பாக வேலை செய்ய வைப்பதற்கான தொழில்நுட்பத்தில் HUAWEI ஈடுபட்டிருக்கிறது. இந்த தொழில்நுட்பத்தின் அடிப்பயைில் HUAWEI 11 செமிகண்டக்டர்களை உருவாக்கியிருக்கிறது. இவற்றுள் மிகப்பெரிய அமைப்புகளான ‘சூப்பர் கிளஸ்டர்கள்’ 10 லட்சம் ஏஐ செயலிகள் வரை ஆதரிக்கும் திறன் கொண்டவையாகும்.
பல ஏஐ சிப்களை ஒன்றிணைத்து ஒரே வேலையை செய்யும் 1,000க்கும் மேற்பட்ட சிறிய இணைக்கப்பட்ட அமைப்புகளை சுமார் 370 வாடிக்கையாளர்களுக்கு HUAWEI ஏற்கெனவே விநியோகித்திருக்கிறது.
செயற்கை நுண்ணறிவை அடிப்படையாக கொண்ட சிப்கள், டேட்டா சென்டர்கள் மற்றும் சாப்ட்வேர்களை உருவாக்குவதில் அமெரிக்காவும், சீனாவும் கடுமையாக போட்டியிட்டு வருகின்றன. சீனா மேம்பட்ட கம்ப்யூட்டிங் சிப்கள் மற்றும் சிப் தயாரிப்பு உபகரணங்களை அணுக முடியாதபடி அமெரிக்கா பல ஏற்றுமதி கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.
இதனால் வெளிநாட்டு சிப்களை சாராமல் உள்நாட்டிலேயே மாற்றுகளை உருவாக்குவதில் சீன நிறுவனங்கள் தீவிரமாக இறங்கியிருக்கின்றன. அமெரிக்காவின் இந்த ஏற்றுமதி தடையானது, HUAWEI நிறுவனம் சீனாவின் முக்கிய ஏஐ சிப் விநியோகஸ்தராக உருவெகடுக்க உதவியிருக்கிறது. நிச்சயமாக அடுத்த 5 ஆண்டுகளில் சீனா, ஏஐ சிப் உற்பத்தியில் அமெரிக்காவை காலி செய்து முன்னணியில் வந்து நிற்கும் என்று சர்வதேச பொருளாதார நிபுணர்கள் எச்சரித்துள்ளனர்.

