Last Updated:
ஈரான் மீதான தாக்குதலில் அமெரிக்கா போர்க்குற்றம் செய்ததற்கான ஆதாரம் இருப்பதாக ஐநா குழு அறிக்கை தாக்கல் செய்துள்ளது. பள்ளிகள், குடியிருப்புகள் மீது தாக்குதல் நடத்தியதாக குற்றச்சாட்டு.
ஈரான் மீதான தாக்குதலில் அமெரிக்கா போர்க்குற்றம் செய்ததற்கான ஆதாரம் இருப்பதாக ஐநா நியமித்த குழு அறிக்கை தாக்கல் செய்துள்ளது.
ஈரானில் அமெரிக்கா தாக்குதல் நடத்தியபோது பள்ளிகள், குடியிருப்புகள் மீது தாக்குதல் நடத்தியதாக குற்றச்சாட்டு எழுந்தது.
இது குறித்து விசாரிக்க வங்கதேசத்தைச் சேர்ந்த சட்ட வல்லுநர் சாரா ஹுசைன் தலைமையில், ஐநா மனித உரிமைகள் ஆணையம் குழுவை அமைத்தது.
நேரில் நடத்திய விசாரணைகள், ஆவணங்கள், புகைப்படங்கள், செயற்கைக்கோள் படங்கள் உதவியுடன் விசாரணை நடத்திய இந்த குழு, இறுதி அறிக்கையை தயார் செய்துள்ளது.
அதில், அமெரிக்கா போரை தொடங்கியபோது ஈரானின் மினாப் நகரில் உள்ள பள்ளி மீது நடத்தப்பட்ட ஏவுகணைத் தாக்குதலில், 120 குழந்தைகள் உட்பட 168 பேர் கொல்லப்பட்டது தொடர்பாக விரிவாக குறிப்பிட்டுள்ளது.
ஈரான் ராணுவ முகாம் மீது அமெரிக்கா தாக்கியதில், அருகே இருந்த பள்ளி பாதிக்கப்பட்டதாக கூறுவதை ஏற்க முடியாது எனவும், அமெரிக்காவின் முதன்மை இலக்கே இந்த பள்ளிதான் எனவும் அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இதேபோல, லாமர்ட் நகரில் குடியிருப்புப் பகுதியில் அமெரிக்கா நடத்திய தாக்குதலில் 22 பேர் உயிரிழந்ததும் திட்டமிட்ட தாக்குதல் என அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
மேலும், போர்க்குற்றங்களுக்காக ஈரான் மக்களுக்கு அமெரிக்கா இழப்பீடு வழங்க வேண்டும் எனவும் இந்த குழு வலியுறுத்தியுள்ளது.

