சிறிலங்கன் ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் சர்ச்சைக்குரிய ஏர்பஸ் விமான கொள்வனவு தொடர்பான விசாரணையில், பல்வேறு முக்கிய விடயங்கள் வெளிச்சமிடப்பட்டுள்ளன.
நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்சவுக்கும் ஏர்பஸ் நிறுவன அதிகாரிகளுக்கும் இடையில் இடம்பெற்றதாகக் கூறப்படும் மின்னஞ்சல் பரிமாற்றங்கள் தடயவியல் விசாரணைகளின் போது மீட்கப்பட்டுள்ளதாக கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாமல் ராஜபக்சவுக்கு எதிரான பணமோசடி விசாரணை தொடர்பான வழக்கு விசாரணையின்போது, அரச தரப்பு சார்பில் முன்னிலையான பிரதி சொலிசிட்டர் ஜெனரல் ஜனக பண்டார இந்த தகவலை நீதிமன்றில் முன்வைத்துள்ளார்.
தடயவியல் விசாரணை
தடயவியல் விசாரணைகளின்போது ஏர்பஸ் நிறுவன அதிகாரிகளுக்கும் சந்தேகநபருக்கும் இடையில் பரிமாறப்பட்ட மின்னஞ்சல்கள் கிடைத்ததாகவும், அவை இந்த பரிவர்த்தனை தொடர்பில் சந்தேகநபர் செயற்பட்ட விதம் குறித்து தகவல்களை வெளிப்படுத்துவதாகவும் அரச தரப்பு தெரிவித்துள்ளது.

மேலும், ஏர்பஸ் நிறுவன அதிகாரிகள் இலங்கைக்கு வந்து இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் ஆணைக்குழு மற்றும் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திடம் வாக்குமூலங்களை வழங்கியுள்ளதாகவும் நீதிமன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனுடன், குறித்த விமான கொள்வனவு தொடர்பான வெளிநாட்டு தடயவியல் தணிக்கை ஆவணங்களும் விசாரணையாளர்களுக்கு கிடைத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக விசாரணையாளர்களால் முன்வைக்கப்பட்ட ஆவணங்களில், 2013 மார்ச் 23ஆம் திகதியிட்டதாகக் கூறப்படும் ஏர்பஸ் நிறுவன மின்னஞ்சல் ஒன்றும் உள்ளடங்கியுள்ளது.
முன்மொழியப்பட்ட விமான விற்பனை
அதில் “ஜனாதிபதியின் மகன்” எனக் குறிப்பிடப்பட்ட ஒருவர், முன்மொழியப்பட்ட விமான விற்பனை தொடர்பான ஏர்பஸ் நிறுவனத்தின் நிலைப்பாட்டை ஜனாதிபதி ஊடாக அமைச்சரவைக்கு முன்வைக்க நடவடிக்கை எடுப்பதாகக் குறிப்பிடப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
இதேவேளை, இந்த விமான கொள்வனவுடன் தொடர்புடையதாகக் கூறப்படும் நிதி பரிமாற்றங்கள் தொடர்பில் பணமோசடி தடுப்புச் சட்டத்தின் கீழ் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
அரச தரப்பு தகவலின்படி, பிஸ் சொல்யூஷன்ஸ் (Biz Solutions) என்ற நிறுவனத்திற்கு சொந்தமான சிங்கப்பூர் வங்கிக் கணக்கொன்றில் 2 மில்லியன் அமெரிக்க டொலர்கள் வரவு வைக்கப்பட்டுள்ளதாகவும், அதில் 800,000 அமெரிக்க டொலர்கள் வர்த்தகர் நிமல் பெரேராவுடன் தொடர்புடைய நிறுவனமொன்றின் கணக்கிற்கு மாற்றப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிதியில் சுமார் 100 மில்லியன் ரூபாவுக்கு சமமான தொகை பின்னர் நாமல் ராஜபக்சவுக்கு வழங்கப்பட்டதாக நிமல் பெரேரா இலஞ்ச ஆணைக்குழுவில் வழங்கிய வாக்குமூலத்திலும் பிரமாணப் பத்திரத்திலும் குறிப்பிட்டுள்ளதாக அரச தரப்பு நீதிமன்றில் தெரிவித்துள்ளது.
எனினும், நாமல் ராஜபக்ச சார்பிலான சட்டத்தரணிகள் இந்தக் குற்றச்சாட்டுகளை நிராகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்…! |

